Thursday, 5 March 2020

அதிகரித்து வரும் உணவு விரயம் – அக்கறையில்லாத மலேசியர்கள் மலேசியாவில் நாள் ஒன்றுக்கு 15000 டன் உணவு விரயம்!!


அதிகரித்து வரும் உணவு விரயம் – அக்கறையில்லாத மலேசியர்கள்
   மலேசியாவில் நாள் ஒன்றுக்கு 15000 டன் உணவு விரயம்!!

     மலேசியர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் உணவு விரயம் பழக்கம் பெரும் கவலையை உருவாக்கும் நிலையை எட்டியுள்ளது எனலாம்.தொடர்ந்து அதிகரித்து வரும் இப்பழக்கமானது நிஜத்தில் மலேசியாவில் அபாயக் கட்டத்தை நெருங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
   நாட்டில் தூக்கியெறியப்படும் திடக்கழிவுகளில் 55விழுகாடு உணவு கழிவுகள் என்பது பெரும் அதிர்சியானது.மேலும்,நாள் ஒன்றுக்கு நாட்டில் விரயம் செய்யப்படும் உணவு கழிவின் அளவு 15000 டன் என்பது பெரும் கவலைக்குரியது.இதில் சுமார் 3000 மெட்ரிக் டன் உணவுகள் மனிதர்களின் கைப்படாத மிகவும் சுத்தமான உணவுகளாகும். மேலும்,8,000 டன் உணவு விரயத்தை தவிக்ககூடிய சாத்தியத்தையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.இது சுமார் பசியோடு வாடும் 11 மில்லியன் பேருக்கு மூன்று வேளைகு உகர்ந்த உணவு என்பது குறிப்பிடத்தக்கது.
    உணவு விரயம் குறித்த விழிப்புணர்வும் கவலையும் மலேசியர்களிடையே இன்னமும் உயிர்த்தெழவில்லை என்பதுதான் நிஜம்.இது குறித்த ஆக்கப்பூர்வமான திட்டங்களும் செயல்பாடுகளும் அரசாங்கத்தாலும் அல்லது பொது அமைப்புகள் மற்றும் தன்னார்வ குழுக்களாலும் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்படவுமில்லை.ஆனால்,இவ்விவகாரத்தில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தொடர்ந்து அதன் பங்களிப்பினை செம்மையாக மேற்கொண்டு வருவதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.
    உணவு விரயம் குறித்து புள்ளி விவரங்களோடு அச்சங்கம் எடுத்துரைத்தாலும் அஃது மலேசியர்களின் காதுகளில் ஒலிக்கவில்லை என்பதை விட அவர்கள் இவ்விடயத்தில் அலட்சியமும் அக்கறையின்மையையும் வெளிப்படையாக காட்டுவதை உணரவே முடிகிறது.
  நாட்டில் விழா காலங்களில் விரயம் செய்யப்படும் உணவுகளின் அளவு இயல்பு நாட்களை காட்டிலும் பன்மடங்கு அதிகம்.விரயம் செய்யப்படும் ஒவ்வொரு உணவு யாரோ ஒருவரின் பசியை போக்கும் உணவு என்பதை நாம் மறந்து விடக்கூடாது.உணவு விரயம் செய்வது கொடுரமான ஒன்றாக கருதப்பட வேண்டும்.
   உலகில் ஒருவேளை உணவுக்கூட இல்லாமல் மக்கள் மண்ணை சுட்டு சாப்பிடும் நிலையிலும் அசுத்தமான நீரை அள்ளி பருகியும் உயிர் வாழ்ந்து வரும் பரிதாப நிலையில் நாம் உண்டு கொழுத்து மகிழ்வதோடு உணவை விரயம் செய்தும் பெரும் அநாகரியகமாக நடந்துக் கொள்கிறோம்.உணவின்றி உலகில் மடிந்து போகும் மனிதர்களின் எண்ணிக்கை 920 மில்லியன் என ஐயக்கிய நாட்டு உணவு நிறுவனத்தின் புள்ளி விவரம் காட்டுகிறது.
    மலேசியாவில்  வீடுகளிலும் உணவகங்களிலும் வீசப்படும் உணவு கழிவுகள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது.நான் பணம் போட்டு வாங்கும் உணவை சாப்பிடுவேன் அல்லடு தூக்கியெறிவேன் எனும் போக்கு மலேசியர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.நீ உண்ணும் உணவு மட்டுமே உன்னுடையது.மீதம் உள்ளவை மற்றவர்களது என்பதை நம்மவர்களிடையே கட்டாயமாக திணிக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.
   அன்மையில்,நடந்து முடிந்த தைபூசத்தின் போது அன்னதானம் எனும் பெயரில் அதிகமான உணவு விரயமாவதை நாம் உணர்ந்திடாமல் போவது மிகவும் வருத்தமான விடயம்.முன்பெல்லாம் ஆலயங்களில் மட்டும்தான் அன்னதானம் வழங்கப்படும்.ஆனால்,நடப்பில் அரசியல் கட்சிகள்,பொது இயக்கங்கள்,அமைப்புகள் என அனைத்து தரப்பும் அன்னதானம் வழங்குவதில் முனைப்புக் காட்டுகின்றன.
   அவ்வாறு ஆங்காங்கே அன்னதானம் கிடைக்கும் நிலையில் தைபூசத்திற்கு வரும் மக்கள் தேவைக்கு அதிகமான உணவை எடுத்துக் கொள்வதும்,பாதி உணவை சாப்பிட்டு விட்டு மீதத்தை வீசுவதும் வழக்கமாகிவிட்டது.தேவைக்கு அதிகமாக எடுத்த உணவையும் கண்ட இடங்களில் வைத்து விட்டும் வீசிவிட்டும் போகும்  செயல்களும் துளியும் குற்ற உணர்வில்லாமல் தொடர்கிறது.
    உணவிற்காக மூன்றாம் உலகப் போர் கூட நிகழ சாத்தியம் இருக்கு என  அஞ்சிடும் நிலையில் உணவு விரயம் என்பது  உலக மக்களிடையே அலட்சியமான ஒன்றாக திகழ்ந்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.உலகில் சுமார் 870 கோடி மக்கள் உணவிற்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கை தினமும் விரயம் செய்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய கொடுரம் என்பதை நாம் உணர வேண்டாமா?
   வருடத்திற்கு விரயம் செய்யப்படும் உணவின் அளவு சுமார் 1.3 பில்லியன் டன் என புள்ளி விவரம் கூறும் அதேவேளையில் இதனால் பொருளாதார இழப்புகளோடு நாம் அதிகம் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களும் அழிவை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.மேலும் 3.3 பில்லியன் 'டன்' கரியமில வாயு உணவு விரயத்தால் உலகத்தின் வாயு மண்டலத்தில் சேர்க்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
    உணவு விரயத்தால்  தூக்கியெறியப்படும் உணவு கழிவுகள் மூலம் பூமியில் உருவாகும் நச்சு வாயு மூலம் இயற்கை பெரும் பாதிப்படைவதோடு நிலமும் அதன் இயற்கை தன்மையை இழந்து விடுகிறது.அவ்வாறு நிலம் அதன் தன்மையை தொலைக்கும் நிலையில் நிலம் வறண்டு பாலைவனமாய் உருவெடுக்கிறது.இந்நிலையால் விவசாயத் துறை பெரும் பாதிப்பினை எதிர்நோக்குகிறது.உணவு உற்பத்தி என்பது பெரும் பின்னடைவை எதிர்நோக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    நடப்பில், உலகின் உணவு உற்பத்தி என்பது தொடர்ந்து சரிந்துக் கொண்டுதான் இருக்கிறது.வரும் 2050இல் உணவு உற்பத்தியை 60 விழுகாட்டிற்கு நிகராய்  அதிகரிக்க முடியாமல் போனால் உலகம் உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் எனும் அச்சுறுத்தலை ஐயக்கிய நாடுகள் சபை நினைவுறுத்தியுள்ளது.மலேசியாவை பொருத்தமட்டில் விவசாய நிலங்கள் மேம்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதால் குறிப்பாக உணவு உற்பத்தி சார்ந்த விவசாயம் என்பது தொடர்ந்து சரிந்து வருகிறது.
    இந்நிலை தொடருமானால்,வரும் 2050இல் உணவு தட்டுப்பாடு நாடுகளில் மலேசியாவும் இடம் பிடிக்கும் சாத்தியத்தை கொண்டிருப்பதை மறுத்திடலாகாது.நாம் விவேகமான செயல்பாட்டை முன்னெடுக்க தவறினால் உணவு விரயத்தால் ஏற்பட போகும் அழிவை சந்திக்க நேரிடும் என்பது மட்டும் உறுதி.
   மலேசியாவில் உணவு  விரயம் என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.மேலும்,நாம் உணவை விரயம் செய்கிறோம் எனும் குற்ற உணர்வு மலேசியர்களுக்கு துளியும் இல்லை என்றால்,அஃது மறுப்பதற்கில்லை.உணவகங்கள்,தத்தம் வீடுகள் மட்டுமின்றி திருவிழா,பண்டிகைகள்,திருமணம் போன்ற பெருவிழாக்களின் போதும் உணவு விரயம் என்பது வழக்கத்திற்கும் மாறாக பன்மடங்கு  அதிகரித்து போவது குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
    இதற்கிடையில்,அவ்வப்போடு நாட்டில் கொண்டாடப்படும் உணவு சந்தை (FOOD FAIR) நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்.இம்மாதிரியான உணவு சந்தை நிகழ்வுகளில் உணவுகள் கேளிக்கை பொருள் போல் சித்தரிக்கப்பட்டு பெரும் அளவில் விரயம் செய்யப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16இல் அனுசரிக்கப்படும் உலக உணவு தினம் கூட ஏதோ கண்காட்சி போலதான் கொண்டாடப்படுகிறது.
    உண்மையில்,விழிப்புணர்வு நாளாகவும் உணவு விரயத்தை கட்டுப்படுத்தும் சிந்தனையோடும் இந்நாளை முன்னெடுக்க வேண்டியதை மலேசியா உட்பட பலநாடுகள் தவறிவிட்டது என்பதுதான் உண்மை.பசிக்காக உணவு உண்ணும் வழக்கம் மாறி தற்போது பொழுதுப்போக்கிற்காக உணவு உண்ணும் நிலை உருவெடுத்து விட்டது.
    கடந்தக்காலங்களில் இவ்விவகாரத்தில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வந்த பல உலக நாடுகள் நடப்பில் உணவு விரயத்தால் ஏற்படப்போகும் விளைவுகளை கருத்தில் கொண்டு உணவு விரயத்திற்கு எதிராக ஆக்கப்பூர்வமாக களமிறங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.அதன் மூலம் சம்மதப்பட்ட நாடுகளில் உணவு விரயத்தை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையும் நம்மால் உணர முடிகிறது.
   இந்த உணவு விரயத்தை தடுக்கும் முயற்சியிலும் அதனை சரியான இலக்கிற்கு கொண்டு செல்லும் வழி தடத்திலும் துர்க்கி,பிரான்சிஸ்,டென்மார்க் ஆகிய நாடுகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வரும் வேளையில்,ஜப்பான்,பிரிட்டிஸ்,சிங்கப்பூர் உட்பட பலநாடுகளும் தற்போது இதில் களமிறங்கியுள்ளன.
   இவ்விடயத்தில் ஜெர்மன் தனித்துவமாய் விளங்குவதாக தெரிய வந்துள்ளது.அந்நாட்டில் விரயம் செய்யப்படும் உணவிற்கு கூடுதல் கட்டணத்தை அபராதமாக வசூலிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.உணவு விரயம் என்பது சமூக குற்றமாக அந்நாட்டில் வரயறுக்கப்பட்டுள்ளது.இஃது மலேசியாவிலும் அமல்படுத்தப்பட வேண்டும்.
    என்னதான் பணம் கொடுத்து உணவை நாம் வாங்கினாலும் அதனை விரயம் செய்யும் உரிமை நமக்கு கிடையாது.பணம் நம்முடையதாக இருந்தாலும் உணவு என்பது பொது சொத்து.அதனை விரயம் செய்யும் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தில் பெரும் குற்றவாளியே.ஒருவேளை உணவிற்காக எத்தனையோ வயிறுகள் பட்டினியால் வாடும் போது அந்த உணவை விரயம் செய்வது மிகவும் தண்டிக்க வேண்டிய ஒன்றாகும்.  
   மலேசியாவில் எந்தநேரத்திலும் உணவு கடைகள் திறந்திருப்பதால்  தேவைக்காக இல்லாமல் நினைத்த நேரம் எல்லாம் உணவு உண்ணும் வாய்ப்பு இயல்பாகவே அமைந்து விடுகிறது.அவ்வாறு அமையும் போது அஃது உணவு விரயத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி உடல் பருமன் உட்பட பல்வேறு உடல் ரீதியிலான சிக்கலையும் ஏற்படுத்துகிறது.
    உணவு விரயத்தால் வருங்காலத்தில் உணவு தட்டுப்பாட்டில் மலேசியா சிக்கிக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் இப்பவே விவேகமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.நாடு முழுவதும் உணவு வங்கி திட்டத்தை அமைப்பதை முதன்மை செயல்பாடாக அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும்.உணவு வங்கியில் சேமிக்கப்படும் உணவு தேவைப்படுவோருக்கு சென்றவடைவது அவசியமாகிறது.
   மேலும்,24 மணி நேரம் இயங்கும் உணவகங்கள் மற்றும் விரைவு உணவகங்கள் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தப்படவும் வேண்டும்.இஅரவு நேரங்களில் பொழுதுபோக்கிற்காக உணவங்களை தேடும் மலேசியர்கள் தேவைக்கு உட்பட்ட உணவை  தேர்வு செய்யாமல் தேர்வு செய்த உணவை சாப்பிட்டு முடிக்காமல் விரயமாக்குகிறார்கள்.
    உணவு விரயத்திற்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வை மேற்கொள்வது இன்றைய சூழலில் பெரும் அவசியமாகிறது.இந்த விழிப்புணர்வை நாட்டின் அனைத்து தரப்பினர் மத்தியிலும் கொண்டு செல்லப்பட வேண்டும்.உணவங்கள்,சிற்றுண்டிச்சாலைகள்,பேராங்காடிகள்,விரைவு உணவங்கள் உட்பட உணவு மையங்கள் ஆகியவற்றின் மீது துரித கண்காணிப்பினை மேற்கொள்ள வேண்டும்.
    அதுமட்டுமின்றி,உணவு விரயம் செய்வதை குற்றமாக வரையறுக்க சட்டம் வரையறுக்கப்பட வேண்டும்.உணவு விரயம் செய்யும் தனிநபர்,உணவங்கள் உட்பட அனைத்து நிலையிலானவர்கள்  மீதும் சட்டத்தை பயன்படுத்தி  தண்டனை வழங்க வேண்டும்.உணவு விரயம் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கையும் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களும் முன்னெடுக்க தவறினால் மலேசியா பெரும் உணவு தட்டுப்பாட்டிற்கு ஆளாகும் என்பதை நினைவுறுத்த வேண்டியுள்ளது.
   உணவு விரயத்தை தடுக்க ஒவ்வொரு மலேசியர்களும் தங்களின் பங்களிப்பினை செய்திட முன் வர வேண்டும்.இந்த உணவு விரயத்தை தடுக்க அதற்கான அடித்தலம் ஒவ்வொரு மலேசியர்களின் வீடுகளிலிருந்தும் தனி மனிதர்களிடத்திலிருந்தும் தொடங்க வேண்டும்.நாம் அனைவரும் ஒருமித்த சிந்தனையோடும் உணவு இல்லாமல் பசியாலும் பட்டினியாலும் வாடும் பரிதாபத்திற்குரிய அந்த மனித உயிர்களை நினைத்துப் பார்த்தால் உணவை விரயம் செய்வது எத்தகைய பாவச் செயல் என உணர்வோம்.
   தனி மனிதன் ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்துவிடு என பாரதி கூறுகிறான்.ஆனால்,நாம் தனி மனிதனுக்கு கிடைக்க வேண்டிய உணவை தடுத்து இயற்கைக்கு மாறாக அதனை விரயம் செய்கிறோம்.சமூக குற்றங்களுக்கு நிகரான உணவு விரயத்தை யார் செய்தாலும் அஃது குற்றமாக கருதி தண்டனை கொடுக்கும் நிலை உருவானால்தான் வருங்காலத்தில் உருவெடுக்கவிருக்கும் பெரும் ஆபத்துகளிலிருந்து மலேசியா விடுப்பட முடியும்.
   நாம் விரயமாக்கும் ஒவ்வொரு பருக்கை உணவு யாரோ ஒருவருடையது என்பதை நாம் கருத்தில் கொண்டு உணவு விரயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.நாம் இன்று செய்யும் இந்த சமூக குற்றத்தினால் நாட்டின் அடுத்த தலைமுறை உணவிற்காக கையேந்தும் நிலை உருவெடுக்கும் என்பதை நாம் மறக்ககூடாது.
   ஏழ்மையும்,வறுமையும் ஆட்கொண்ட எத்தனையோ நாடுகளில் பசி,பட்டினியால் பஞ்சத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு நொடியும் மரணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஒட்டிய உடம்போடு,பசியின் கோரதாண்ட்வத்தின் தோற்றத்தோடு ஒருவேளை உணவுகூட இல்லாமல் நம் நாட்டின் அடுத்த தலைமுறை குழந்தைகள் கையேந்தும் காட்சியை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில் நாம் உணவு விரயம் எனும் கொடுரத்திற்கு  சாவுமணி அடிக்க வேண்டும்.
   மாற்றம் ஒன்றே மாறாதது.எனவே,நாம் நினைத்தால் மாற்றத்தை உருவாக்க முடியும்.அலட்சியமும் அக்கறையின்மையும்  நாட்டின் பொருளாதாரத்தையும் நாட்டு மக்களையும் குழிதோண்டி புதைத்து விடும் என்பதை நினைவுறுத்த வேண்டியுள்ளது.உணவு விரயத்தை விரட்டி அடிப்போம்.உணவு தட்டுப்பாட்டை தடுத்திடுவோம்.
   

2020இல் உலகின் முதன்நிலை நோயா மன அழுத்தம் உருவெடுக்கும் – உலகளாவிய நிலையில் 50 விழுக்காட்டினர் தற்கொலை!!


2020இல் உலகின் முதன்நிலை நோயா மன அழுத்தம் உருவெடுக்கும் – உலகளாவிய நிலையில் 50 விழுக்காட்டினர் தற்கொலை!!

   இன்றைய நவீனத்துவ உலகில் மனிதனின் ஆரோக்கியம் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.கருவில் வளரும் குழந்தைகூட நோயோடு பிறக்கும் கொடுரமான உலகில் தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் உலகை மிரட்டப் போகும் பெரும் கொடிய நோயாக மன அழுத்தம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
    உலகளாவிய நிலையில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வரும் 2020இல் உலகின் முதன்மை நோயா மன அழுத்தம் உருவெடுக்கும் என நம்பப்படுகிறது.அதேவேளையில்,நடப்பில் உலகளாவிய நிலையில் தற்கொலை செய்துக் கொள்பவர்களில் 50 விழுக்காட்டினர் மன அழுத்தத்தால் தான் செய்துக் கொள்கிறார்கள் என்பதும் அதிர்ச்சியானது எனலாம்.
    மன அழுத்தம் கட்டுப்பாடற்ற நிலையை கடந்து அஃது தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் மனநோய் உட்பட பல்வேறு  பிரச்னைகளும் சிக்கல்களும்  ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறும் நிலையில் மேலும், மாரடைப்பு, சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், பல நீண்ட கால வியாதி உள்ளவர்களிடமும் மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. இதில் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அவருக்கு நோய் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். குற்ற உணர்வுகள், தன்னைப்பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, சமூகத்தைப்பற்றி எதிர்மறையான எண்ணங்கள், பேச்சு, செயல் மற்றும் எல்லாவற்றிலும் வேகம் குறைதல் போன்றவை மன அழுத்தநோயின் அறிகுறிகள்
    இன்றைய நவீனத்துவ உலகில் மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனைகூட  செய்து பார்க்க இயலாது.ஒரு அளவு வரை மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு வழி செய்தாலும் அஃது தொடர்ந்து அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை உருவாக்கிவிடும்.மன் அழுத்தம் என்பது இன்றுதான் புதிதாக தோன்றியதல்ல.அஃது காலகாலமாய் இருந்துக் கொண்டுதான் வந்துள்ளது.
    மக்கள் இன்று பலவிதங்களிலும் மன அழுத்தத்திற்கும் பதட்டத்திற்கும் ஆளாகிறார்கள். பழங்காலத்தில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக் கொள்ளும் ஒருவரை  அறியாமை,கோழை என்ற பெயரில் அழைத்ததை இன்று அழுத்தம், பதட்டம் என்ற புதிய பெயர்களில் அழைக்கிறோம்.
   மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் நிர்வகிப்பதைப் பற்றி நிறையப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக உங்கள் மன அழுத்தத்தை நீங்கள் நிர்வகிக்க வேண்டும்?நம் சிந்தனை மனவோட்டங்களை சரிவர நிர்வாகிக்க இயலாமல் போவதுதான் இதற்கு பெரும் காரணியம்.எதற்காக உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க விரும்புகிறீர்கள்? மன அழுத்தம் நீங்கள் செய்யும் செயலால் நேர்வதல்ல. உங்களையே சரியாக நிர்வகிக்கும் திறமை உங்களுக்கு இல்லாததால் நேர்வது. உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள், சக்திநிலை இவற்றை எப்படி வைத்துக் கொள்ளவேண்டுமோ அப்படி வைத்துக் கொள்ளும் திறன் இல்லாததால் தான் மன அழுத்தமும் பதட்டமும் வருகின்றன. உங்களை நலவாழ்வில் தக்க வைத்துக் கொள்ளும் திறனோ, மன அழுத்தத்திற்குக் காரணமான சக்திநிலைகளை நிர்வகிக்கும் திறனோ உங்களிடம் இல்லை.
    அவ்வாறு இல்லாமல் போவதால் நம்மை சுற்றி நடக்கும் எதிர்மறையான  விடயங்களிலிருந்து வெலியேற முடியாமல் தவறான முடிவுகளையும் செயல்பாடுகளையும் செய்ய முனைவதோடு மட்டுமின்றி எதிலும் நாட்டம் இல்லாமல் நமக்கு நாமே தனிமை சிறை அமைத்து வாழ தொடங்கி விடுவோம்.இதனால் தூக்கம் இழந்து,சந்தோசத்தை தொலைத்து நமக்கான இயல்பு தன்மையை இழந்து நடைபிணம் போல் வாழும் சூழல் ஏற்படும்.இதில் ஏற்படும் விரக்தியின் உச்சம் தான் தற்கொலைக்கான தொடக்கமாக அமைகிறது எனலாம்.
    மனஅழுத்தம் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் மற்றும் பெண் என இரு பாலினத்திற்கு பொருந்தக்கூடிய ஒரே அளவிலானவை கிடையாது. இன்றைய காலக்கட்டத்தில், வேலை ஒதுக்கப்பட்ட பின், தங்களின் மூத்த பணியாளர்கள் மற்றும் மேலாளர்களை திருப்திப்படுத்தும் முயற்சியில் பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. நாம் நம் இலக்கை அடைய முடியாத நேரத்தில் தான் பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
    குறைவான அளவில் மன அழுத்தம் அல்லது பதட்டம் சில நேரங்களில் பயனுள்ளதாக அமைகிறது. உதாரணமாக, ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக நாம் சிறப்பாக கவனம் செலுத்தி அதிக ஆற்றலுடன் அந்த வேலையை செய்கிறோம். இரண்டு வகையான அழுத்தங்கள் உள்ளன: நேர் அழுத்தம் (eustress- “positive stress”) மற்றும் சவால்கள் அல்லது அதிக பளு என பொருள்படும் எதிர்மறை அழுத்தம் (distress – “negative stress”). மன அழுத்தம் அதிகமாகும் போதும், சரியாக நிர்வகிக்கப்படாமல் இருக்கும் போதும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன.
    மன அழுத்தத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகள்
  • வாழ்வியல் அழுத்தம்
தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது.
  • உள்நிலை அழுத்தம்
இதனால் மக்கள் தாங்களாகவே அழுத்தத்தை உண்டாக்கி கொள்கிறார்கள். நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது இது ஏற்படுகிறது. சிலர் இவ்வகை வாழ்நிலைக்கு பழகிவிடுகிறார்கள். அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை விரும்பி ஏற்கிறார்கள்.
  • சுற்றுச்சூழல் அழுத்தம்
சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தம். அழுத்தம் ஏற்படுத்தும் சூழல் காரணிகளை அறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் அழுத்த அளவை குறைக்கலாம்.
  • களைப்பு மற்றும் அதிக வேலைப்பளு
அதிக நாட்களின் பளு காரணமாக ஏற்படும் இவ்வகை அழுத்தத்தால் அதிக உடல் பாதிப்புகள் ஏற்படும். வீடு அல்லது பள்ளியில் அதிக அல்லது கடினமான வேலையை செய்வதால் இது ஏற்படுகிறது. ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படாததாலும் இது ஏற்படும். பலர் இதனை கட்டுப்படுத்துவது சிரமம் என்று நினைப்பதால், இதுவே மிக கடுமையான அழுத்தமாக கருதப்படுகிறது.
மன அழுத்தம் உண்டாக்கும் காரணிகளை குறுகிய (acute) மற்றும் நீண்ட கால (Chronic) பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகைகளாவும் வகைப்படுத்தலாம்
  • குறுகியகால காரணங்களால் ஏற்படும், உதாரணமாக ‘சண்டையிடு’ அல்லது ‘ஓடிவிடு’ வகை விளைவுகள், குறுகிய கால அழுத்தமாக கருதப்படுகிறது. இவை, ஆபத்துக்கள் அல்லது அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகள் தாக்கும் போது மூளையின் பழைமையான பகுதி மற்றும் மூளையில் உள்ள சில இரசாயனங்களால் ஏற்படும் துரிதமான விளைவுகளாகும்.
  • சண்டையை அல்லது ஓட்டத்தைத் தூண்டும் காரணிகள் முடிந்த பிறகும் நடைமுறையில் இருக்கும் அல்லது தொடர்ந்த காரணிகள் நீண்டகால பாதிப்புக்களாக கருதப்படும். தொடர்ந்த அழுத்தம் ஏற்படுத்தும் வேலை, உறவுமுறை சிக்கல்கள், தனிமை, நிதிநிலை தொடர்பானக் கவலைகள் ஆகியவை இவற்றுள் சில.

·         மன அழுத்தத்தை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்!

படப்படப்பு
 மன அழுத்தம் இருந்தால், பதட்டம் ஏற்படும். இவ்வாறு பதட்டத்தின் போது இதய துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆகவே அடிக்கடி பதட்டம் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
           தலைவலி
   பொதுவாக டென்சன் ஏற்பட்டாலே தலைவலி ஏற்படும் என்பது தெரிந்த   ஒன்றே. ஆனால் அதிகமான அளவில் மன அழுத்தமானது இருந்தால், மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்களிலும் அழுத்தம் மற்றும் துடிப்பு அதிகரிக்கும். இதனால் கடுமையான ஒற்றை தலைவலிக்கு ஆளாகலாம்.
கூந்தல் உதிர்தல்
 நவீன உலகில், கூந்தல் உதிர்தலுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம் தான். சிலருக்கு இளமையிலேயே வழுக்கை ஏற்படுவதற்கு காரணமும் மனஅழுத்தம் தான். எனவே அதிக வேலைப் பளுவினால் டென்சன் மற்றும் மன அழுத்தம் இருந்தால், உடனே அதனை சரிசெய்ய பாட்டு கேட்பது, உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது என்பனவற்றில் ஈடுபட வேண்டும்.
தற்காலிக ஞாபக மறதி
மன அழுத்தம் இருந்தால், அடிக்கடி மறதி ஏற்படும். ஏனெனில் வாழ்க்கையானது ஒரே அழுத்தத்தில் இருக்கும் போது, எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. இவ்வாறான மறதி ஏற்பட்டால், உடனே மனதை அமைதிப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
அதிகபடியான வியர்வை
 எப்போதுமே வியர்த்துக் கொண்டிருந்தாலும், அது மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறி. ஆகவே உடனே மன அழுத்தத்தை குறைப்பதற்கான முறைகளை பின்பற்ற வேண்டும்.
நரைமுடி
பொதுவாக நரைமுடியானது பரம்பரை வழியாக அல்லது அதிகப்படியான மன அழுத்தத்தினால் தான் ஏற்படும். அதிலும் தற்போது இளம் வயதிலேயே நரைமுடியானது வந்துவிடுகிறது. எனவே இவ்வாறு இளம் வயதிலேயே நரைமுடியானது ஏற்பட்டால், உடனே அதனை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
தொடர்ந்து எரிச்சல்
 எப்போதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலானது ஏற்பட்டால், அது நிச்சயம் மன அழுத்தத்திற்கான அறிகுறியே. சில சமயங்களில் எரிச்சல் அல்லது கோபம் வந்தால் பிரச்சனையில்லை. ஆனால் அதுவே எப்போதும் இருந்தால், அது பெரும் பிரச்சனை.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
மாதம் மாதம் ஏதாவது ஒரு காரணத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறதென்றால், அதற்கு மன அழுத்தத்தினால், உடல் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.
முதுமை
மன அழுத்தமானது அதிகம் இருந்தால், சீக்கிரமாகவே முதுமைத் தோற்றமானது காணப்படும். மேலும் மன அழுத்தம் அளவுக்கு அதிகமாக இருந்தால், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுவதோடு, ஆங்காங்கு கரும்புள்ளிகளையும் ஏற்படுத்தும்.
மன அழுத்தம் தொடர்பான சில நோய்கள்
  • வயிற்று நோய்கள்
  • போதைக்கு அடிமையாதல்
  • ஆஸ்த்துமா
  • களைப்பு
  • படபடப்பு, தலைவலி
  • இரத்த அழுத்தம்.
  • தூக்கமின்மை.
  • வயிற்று, ஜீரண கோளாறுகள்.
  • இருதய நோய்கள்.
  • மனநிலை பாதிப்பு.
  • சொரியாசிஸ், படை, அரிப்பு, உணர்ச்சியற்ற தோல் போன்ற தோல் வியாதிகள்.
மலேசியர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம்:
  மலேசியாவில் ஆய்வொன்றில் கடந்தாண்டு சுமார் 18336 பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.சுகாதார மையங்கள்,கிளினிக் ஆகியவற்றில் சுமார் 273,203 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட மனநல பரிசோதனையில் இஃது கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார துணையமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
   இளம் பருவத்தினர் போதை பழக்கங்களுக்கு அடிமையாதல், கல்வியில் பின்தங்கல், வீட்டைவிட்டு ஓடிப்போதல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் மன அழுத்தத்தின் காரணமாக இருக்கலாம். இவ்வாறு பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படும் மன அழுத்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை செய்வது அவசியம்
  
மலேசியாவில் பொருளாதார நெருக்கடியால் அரசு ஊழியர்களில் 30 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்ட மன அழுத்தப் பிரச்சனைக்கு ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தத்தைப் போக்க அவர்கள் ஆலோசகச் சேவையை நாடியுள்ளனர். இருப்பினும், நிலையான மாத வருமானம் பெறுவதால் அவர்களின் மன அழுத்தப் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக கூறப்படுகிறது.  
  
குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் அதிகமான குழந்தைகளைக் கொண்டிருப்பதாலும் வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க கடன் பெற்றிருப்பதாலும் நிதி நெருக்கடியை எதிர்நோக்குவதாக பொதுச் சேவைத் துறை கூறுகிறது.
   அதேவேளையில்,பள்ளி மாணவர்களிடமும் ஆசிரியர்களிடம் மன அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் அவர்களையும் அறியாமல் பற்றிக் கொள்கிறது.
   மேலும்,மலேசியாவில் நிலவி வரும் கல்வி கடனுதவி,வேலை இல்லாமை ஆகியவையும் இளம் தலைமுறையின் மத்தியில் மன அழுத்தத்தை அதிகரிக்க பெரும் காரணியங்களாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.அதேவேளையில்,குறைந்த வருமானம் அல்லது ஊதியம் பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவையும் சாமானிய மக்களின் பொருளாதார சிக்கலாம் மன அழுத்தத்திற்கு விதைப் போடுகிறது எனலாம்.
   மன அழுத்தத்தை சமாளிக்கவும் அல்லது அதிலிருந்து விடுப்படவும் ஆரோக்கியமான வழிமுறைகள் உள்ளன.ஆனால்,நமக்குள் மாற்றம் எனும் சிந்தனை உயிர்ப்பிக்காத வரை நம்மால் அதிலிருந்து விடுப்பட முடியாது.மன அழுத்தத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வினை நோக்கி பயணிக்க வேண்டும்.மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பட்வரை தனிமைப்படுத்தாமல்,அவருக்கு ஆறுதலாகவும் அன்பாகவும் அரவணைக்கும் போக்கினை உடன் இருப்பவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
   மன அழுத்தத்தை முற்றாக துடைத்தொழிக்க முறையான  மருத்துவம்,ஆலோசனைகள்,தியானம்,இசை,சுற்றுலா,நடைபயிற்ச்சி,நண்பர்களோடு கலந்து பேசுவது,குடும்ப உறுப்பினர்களின் அக்கறை,அன்பு ஆகியவை பெரும் பங்காற்றும்.நமக்குள் ஏற்படும் மாற்றத்தை உடனடியாக உணர்ந்து அதனை களைய முற்பட்டால் மன அழுத்தத்தை விரட்டி அடிக்க முடியும்.நம்மிடையே தொடரும் அலட்சியம் மன் அழுத்ததிற்கு தீணி போடுவதோடு அஃது மரணத்தையும் விளைவிக்கும் என்று எச்சரிக்க வேண்டியுள்ளது.

Thursday, 20 February 2020

தாய் மொழி பேசாத இனம் தரணியில் மடிந்து போகும்!!



பிப்ரவரி 21 உலக தாய்மொழி நாள் என்பதை யாவரும் அறிவர்.21 பிப்ரவரி 1952இல் வங்கமொழியை அரசு மொழியாக அறிவிக்க வேண்டி வங்காளதேசதில் நடத்தப்பட்ட போராட்டத்தில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் உயிர் நீத்தனர்.அந்த நான்கு மாணவர்களின் நினைவாக யுனோஸ்கோ 21 பிப்ரவரியை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது.1999ஆம் ஆண்டு 21 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் 2000ஆம் ஆண்டிலிருந்து உலக தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டின் அடிப்படையில் உலக முழுவதும் யுனோஸ்கோ மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் உலகில் பேசப்படும் 6 ஆயிரம் மொழிகளில் மாதத்திற்கு 2 மொழியும் அதன் பண்பாடும் அழிந்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவலை அஃது வெளியீடு செய்திருந்ததோடு மட்டுமின்றி உலகில் 40 விழுகாட்டினர் தங்களின் தாய்மொழியில் கல்வியை கற்கவில்லை என்றும் எச்சரித்துள்ளது.

உலகில் எந்தவொரு இனம் அதன் தாய் மொழியை பேச மறுக்கிறது அல்லது பேச தவறுகிறது அந்த இனம் இந்த தரணியில் மடிந்து போகும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.மொழி அழிந்தால் இனம் அழியும்.ஒரு இனத்தின் அடையாளமும் அதன் உயிரும் தாய் மொழிதான் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் பெரும் படைகளும் போர் வீரர்களும் தேவையில்லை. அந்த இனத்தின் மொழியை அழித்தாலே அந்த இனம் மடிந்துவிடும் என்பது நிதசன் உண்மை.

ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தாயின் ஒலியை தாய்மொழி வடிவில்தான்  முதலில் அறிகிறது.தாய்மொழி என்பது வெறும் பேசும் மொழியல்ல.அஃது தாயின் கருவறையில் சுவாசித்த முதன்மொழி என்பதை நாம் மறந்திடக்கூடாது.

ஒவ்வொரு இனத்திற்கும் அவர்களின் தாய்மொழியானது பெருமிதமான அடையாளத்திற்குரியது.ஆனால்,நாகரிகம் என்னும் பெயரில் இன்றைக்கு தாய்மொழியில் பேசுவது பெரும்பான்மை இனங்களுக்கு அந்நியமாகி விட்டது.மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை மறந்துவிட்ட சமூகங்கள் உலகில் இன்றைக்கு தாய்மொழியை தொலைத்து நிற்கின்றன.

உலகளாவிய நிலையில் இன்றைக்கு எத்தனையோ மொழிகள் அழிந்துவிட்டன.அவை அழிந்ததற்கு அந்த மொழிக்கு உரிய இனம் தான் காரணியம்.தாய்மொழியை பேசவும் எழுதவும் முற்படாத அதனை பயன்படுத்தாத நிலையில் தான் இங்கு மொழிகள் தொலைந்தன என்பது வரலாறு.அந்த வகையில் கல்தோன்றி மண்தோன்றா முன் தோன்றிய மூத்தகுடியான தமிழினத்தின் பெருமையை தாய்மொழியாம் நமது தமிழ் மொழியே உயர்த்தி பிடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் மொழி தொன்மையும் உலகில் நனித்துவமான பெருமையும் கொண்ட மொழி.உலக நாடுகளில்  நடப்பில் சுமார் 6 ஆயிரம் மொழிகள் பயன்பாட்டில் இருந்ட்தாலும் அதில் தொன்மையும் நனிசிறப்பும் மிக்க  மொழியாக விளங்கும் தமிழ் மொழி 94நாடுகளில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.இத்தகைய பெருமைகுரிய மொழிக்கு சொந்தக்காரர்களான நாம் அதன் மீது பற்றும் கர்வமும் கொண்டிருக்க வேண்டாமா?

உலகில் அனைவரும் தத்தம் தாய்மொழியில் பேசுகிறார்கள்.ஆனால்,தமிழர்களோ மொழிகளின் தாய்மொழியில் பேசுகிறார்கள் என்னும் பெருமைக்குரிய நிலையில் வாழும் தமிழர்கள் தமிழில் பேசுவதை பெருமிதமாக கருத வேண்டும். தாய்மொழி பேசாத நாக்குகள் அறுத்தெறியப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் வீடுகளில் கூட தாய்மொழி பேசுவது குறைந்து விட்டது.அனைவரின் நாக்குகளிலும் அந்நியமொழி ஆக்கிரமித்து விட்டது.  “மாற்றான் மொழி வீட்டில் சிரிக்க தாய் மொழி தெருவில் அழுகிறது” என்பதுதான் இன்றைய வாழ்வியல் நிஜம்.பூனையும் நாயும் கூட தன் மொழியில் பேசும் போது தமிழா நீ மட்டும் ஏன் அந்நிய மொழியில் பேசுகிறாய்? பல மொழிகள் பேசிய பாரதிகூட ‘’யாம் அறிந்த மொழிகளிலேயே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றார்.

தமிழ்மொழி ஏனைய மொழிகளை விட நீண்ட இலக்கணம் இலக்கிய  மரபுகளை கொண்டது.செம்மொழியாக விளங்கிடும் தமிழ் மொழி தொல்காப்பியம், நன்னூல்,முத்தொள்ளாயிரம், பதினென்மேற்கணக்கு ,பதினென்கீழ்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், பெரியபுராணம், திருக்குறள் என எண்ணிலடங்கா பெரும் நூல்கள் தமிழ்மொழியின் சிறப்பின் சான்றாகவும் அதன் தொன்மையின் சான்றாகவும் இன்றைக்கும் உயிர்ப்பித்திருக்கிறது.

நிலவில் மனிதன் வாழ்ந்திருந்தால்கூட அங்கு தமிழன் தான் வாழ்ந்திருக்ககூடும் என ஆய்வாளர்கள் கூறும் நிலையில் உலகின் முதல் மனிதன் தோன்றிய குமரியகண்டத்தின் முதல் மனிதன் தமிழந்தானே.அவன் பேசிய மொழி தமிழ்தானே என பெருமைக் கொள்ளும் சூழலில்  உலகின் மூத்தமொழி தமிழ்தான் என்பதில் கிஞ்சீற்றும் ஐயமில்லை.

தாய்மொழி என்பது நம் உணர்வின் மொழி.அது வெறும் பேச்சிற்கும் எழுத்திற்குமான மொழியல்ல.நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு நுகர்விலும் தாய்மொழியின் வாசம் நிறைந்திருக்க வேண்டும்.உலகில் இருக்கும் எந்த மொழிகளின் இலக்கியத்தையும் உணர்ச்சி,பொருள்,நயம்,வடிவம்  குன்றாமல் மொழி பெயர்த்து விடலாம்.ஆனால்,தமிழை அப்படியே பிரதிபலிக்க வேறு எந்த மொழிகளாலும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இனத்தின் பெருமையும் அதன் அடையாளத்தையும் தாங்கி நிற்கும் தாய்மொழியை பேணிக்காக்க வேண்டியது ஒவ்வொரு இனத்தின் தனித்துவ கடமையாகவும்.மொழி உயிர்ப்பித்தால் தான் அது சார்ந்த இனம் வாழும் என்பதை நாம் மறந்திடகூடாது.வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.உலக தாய் மொழி நாளில் தாய்தமிழை போற்றி தாய் மொழியை பெருமிதமாக உயர்த்தி நிற்பதே ஒவ்வொரு தமிழனின் பெரும் கடமை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பையும் தொன்மையையும் நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.6 ஆயிரம் மொழிகளுக்கு மேல் இருக்கும் இப்புவியில் சில மொழிகள் மட்டுமே எழுத்து மொழியாகவும் பேசும் மொழியாகவும் உள்ளன.அவற்றில் மூலமொழிகளாக கருதப்படும் ஆறு மொழிகளில் தமிழும் சீனமும் மட்டுமே இன்னும் எழுத்து மொழியாகவும் பேசும் மொழியாகவும் உள்ளது.
எபிரேய மொழி,இலத்தின் மொழி,சமஸ்கிருத மொழி ஆகியவை நடப்பில் அதன் பேச்சு மொழியை இழந்து வெறும் எழுத்து மொழியாக மட்டுமே உள்ளன.இது நாளடைவில் அதன் அடையாளத்தை தொலைந்து மரணித்துப் போகும் என்பது வருத்தமானதே.இந்நிலை ஒருபோது தமிழுக்கு வராமல் இருக்க வேண்டுமானால் தமிழர்கள் செம்மொழியான தாய்மொழியில் பேசியும் எழுதியும் வாழ்வதோடு தொடக்கக்கல்வியை தாய்தமிழில் கற்கவும் வேண்டும் என்பது காலத்தின் அவசியமாகிறது.
தமிழுக்கு அமுதென்றி பேர்!-அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதும்,தமிழ்மொழி எவ்வளவு சிறப்பும் தொன்மையும் இனிமையும் வாய்ந்தது என்றூ ஒப்புநோக்க தக்கது. தமிழ் மொழியை வெறும் மொழியாக மட்டும் வரையறுக்க முடியாது. அது தமிழினத்தின் தாயாகவும் அந்த இனத்தின் பண்பாட்டையும்,பாரம்பரியத்தையும் வாழ்வியல் சான்றையும் மெய்பிக்கும் அதிசயமாகவும் உயர்ந்து நிற்கிறது.

தொன்மை தமிழ், இலக்கிய வளமும் இலக்கண நுட்பமும் கொண்ட மொழியாக திகழ்ந்து வருகிறது. தமிழின் தொண்மையை ஆராய்ந்து கண்டறிந்த  மொழி ஆராய்ச்சியாளர்கல் தமிழ்மொழி சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையதாக அகல்வாராய்ச்சியின் வழி நிருபித்துள்ளார்கள்.

முச்சங்கள் அமைத்து மொழி வளர்த்த பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. அவற்றை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என பகுத்து தமிழை வளர்த்திருக்கிறார்கள். அகத்தியம் எனும் நூல் முதற்சங்கத்தில் தோன்றிய முதல் நூலாக கருதப்படுகிறது. தொல்காப்பியம் இடைச்சங்கத்தில் தோன்றிய நூலாக கருதப்படுகிறது. திருக்குறள், குறுந்தொகை போன்ற நூல்கள் கடைச்சங்க நூல்களாக கொள்ளப்படுகின்றது.

சங்க இலக்கியங்கள் அகம், புறம் எனும் இருப்பிரிவுகளாக புலவர்களால் பாடப் பட்டிருக்கின்றது. கலவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை ஆகியவற்றை அகப்பாடல்களில் நிரம்பியிருப்பதைக் காணலாம். மன்னர் ஆட்சி முறை, வீரம், புலமை போன்றவை புறப்பாடல்களில் வெளிபடுவதை உணரலாம். இத்தகைய பிரிவுகளைக் கொண்டு வாழ்க்கைக்கு வேண்டிய நற்சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் தமிழர்கள் சங்க இலக்கியம் தொடங்கி இன்று பல பரிணாமங்களை கடந்து, காலத்தை வென்று நிற்கிறது என்றால் இம்மொழியின் சிறப்பை என்னவென்று கூறுவது. எனவே, தமிழை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மாதவம் செய்திருக்க வேண்டும் என்றால் அது மிகையாகாது.

தமிழை கற்று,அதன் இனிமையிலும் தொன்மையிலும் காதல் கொண்டு வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவரெல்லாம் பின்னாளில் தன் கல்லறைக்கும் தமிழை சுமந்து சென்றவர்கள் இங்கு உண்டு.ஆனால்,வேறு மொழி கற்ற எந்த தமிழனும் வேறு மொழியை சாகும் வரை கொண்டாடி மகிழ்ந்ததில்லை என்று மெய்சிலிர்க்க கூறலாம்.

அவ்வாறு தமிழை நேசித்து இயறை பெயரை கூட மாற்றிக் கொண்டு தமிழனாகவே வாழ்ந்தவர்களில் Constantine Joseph Beschi என்னும் வீரமாமுனிவரும் அடங்குவார்.தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளை செய்துள்ள இவர் 23 நூல்களை தமிழில் எழுதியுள்ளார்.அவர் எழுதிய தேம்பாவணிஅவரது தமிழ்ப் புலமைக்கு சான்றாக பெருங்காவியமாக இன்றைக்கும் போற்றப்படுகிறது.

தாய்மொழியை உயிராய் மதிப்பவர்கள் தமிழர்கள்.வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனித்துவ பெருமை தமிழுக்கு மட்டுமே உள்ளது. ஆம்,இந்த மொழிக்கு சொந்தக்காரனும் தன் பெயரில் தனது தாய்மொழியை இணைத்துக் கொள்வதில்லை. ஆனால், தமிழர்கள் தமிழ் செல்வம்,தமிழரசி, தமிழினியன், என தன் தலைமுறைக்கே தாய்மொழியை பெயராய் சூட்டி மகிழ்ந்தான் என்பது  பெருமைக்குரிய விடயம் தானே.

இத்தகைய பெருமையெல்லாம் சுமந்து நிற்கும் தமிழ் மொழியை மறந்து அந்நிய மொழியில் பேசுவதும் கற்பதும் எவ்வளவு பெரிய துரோகம் அது என்பதை தமிழர்கள் உணர வேண்டாமா?தமிழன் வாயில் அந்நிய மொழி உதிர்ப்பதை தாங்க முடியாத பாவேந்தன்;

  மம்மி என்றது குழந்தை;அம்மா என்றது கன்று!
                                   ஆங்கிலம் கலந்து தமிழ் பேசாதே!
                                    அன்னை முகத்தில் கரி பேசாதே!
                                    சூடு சொரணை கொஞ்சமும் இல்லை;
                                    சொல்லடா நீயா தமிழின் பிள்ளை?

என்று ஆவேசமாக திட்டுகிறார்.தமிழின் பெருமையை எடுத்துரைக்கிறார்.மேலும்,தேவையின்றிப் பிறமொழிச் சொற்களைத் தமிழில் கலப்பதை வேண்டுமென்றே ஆதரிப்பதும்,தமிழுக்குரிய சிறந்த வரிவடிவத்தைச் சிதைத்து இழி வழக்குகளை எழுத்து மொழியில் புகுத்துவதும் தமிழ்ப் பகைவர் செயல் என்றும் எச்சரிக்கிறார் மொழிஞாயிறு ஐயா பாவாணார் அவர்கள்.
தமிழ் மொழி உயிர்நாவில் உருவான உலகமொழி.இலக்கண செம்மையில் வரமே இல்லா வாய்மொழி.உலக தாய்மொழி நாளான இன்று நாம் நமது தாய்மொழியை போற்றுவோம்.தமிழை நேசிப்போம்.தமிழோடு வாழ்வோம்.

தமிழன் என்றொரு இனமுண்டு
அவனுக்குத் தனியொரு குணமுண்டு
அமிழ்தம் அவந்தம் மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்!!

என்ற உன்னதம் போற்ற நாம் நமது தாய்மொழியாம் உலக செம்மொழியான தமிழோடு பயணிப்போம்.








மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!!

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!! மலேசியாவில் வாழ்ந்த வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்திர இடத்தை தங்களின் தனி...