Sunday, 8 March 2020

பெண்ணுரிமையென்பது உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும்!!


பெண்ணுரிமையென்பது உழைப்பு  மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும்!!

(சிவாலெனின்)

பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்களுக்கு துளியும் சாத்தியமில்லை.சமூகத்தில் பெண்களின் நிலையை வைத்தே சமூக முன்னேற்றத்தை நம்மால் அளவிட முடியும் என்கிறார் தொழிலாளர் வர்க்கத்தின் தோழன் காரல் மார்க்சு.ஒரு சமூகத்திலும் அல்லது ஒரு நாட்டிலும் பெண்கள் தங்களுக்கான உரிமையோடும் சுதந்திரத்தோடும் வாழ்கிறார்கள் என்றால்,அச்சமூகமும் அந்நாடும் நிச்சயம் முன்னேற்றமும் வளர்ச்சியும் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணாத்திக்கம் கொண்ட இவ்வுலகில் பெண்கள் தங்களுக்கான அனைத்தையும் போராடியே பெறப்பட்டு வந்துள்ளனர்.அவர்களின் உரிமை,தேவைகள்,உணர்வுகள் உட்பட பல்வேறு நிலைகளில் அவர்களின் போராட்டங்கள் தான் அவர்களுக்கான உன்னதத்தை பெற வைத்துள்ளது.எந்த இனமாகவும் எந்த தேசமாகவும் இருந்தாலும் பெண்களுக்கெதிரான பெரும்பான்மை ஆண்களின் மனோபாவம் பெண் என்பவள் ஆணுக்கு அடிமையாகத்தான் இருத்தல் வேண்டும் என்பதாகும்.
உலகில் ஆணுக்கு பெண் எந்நிலையிலும் சலைத்தவள் அல்ல,பெண்ணும் ஆணுக்கு நிகரானவளே என சோசலீச சிந்தனையாளர்கள் அக்காலம் தொட்டே பேசியும் எழுதியும் வந்துள்ளனர்.பெண்களுக்கு சரிநிகரான உரிமை மட்டுமின்றி ஆணாத்திக்கம் நிறைந்த முதலாளித்துவம் அவர்களுக்கு ஆண் தொழிலாளியை காட்டிலும் குறைவான ஊதியம் கொடுத்து பெண்களின் உழைப்பையும் சுரண்டியுள்ளனர் என்பது வரலாற்று துயரம்.

பொதுவாகச் சமூகவியல் கோட்பாட்டின் படி ஒத்த தகுதியுடைய இரு கூறுகளிடையே எப்பவுமே முரண்பாடுகள் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கும்.அவ்வகையில்,ஆண் – பெண் என்ற இரண்டு உயிர்களுக்கிடையே அவை தோன்றிய காலம் முதல் போராட்டமும் முரண்பாடும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.மானுடத்தின் உயர்ந்த பண்பு மனிதனை மனிதனாக  மதிப்பதாகும்.ஆனால்,இப்பண்பு அக்காலம் தொட்டு இன்று வரை மனிதமனங்களில் குறிப்பாக ஆண்களின் மனங்களில் இன்னமும் அந்நியமாக இருந்துக் கொண்டு வெறுமையாகவே காட்சி அளிக்கிறது.
சொந்த வீடுகள் தொடங்கி சமூகம்,வேலை இடம்,கல்விகூடம்,நாடு என எல்லா நிலையிலும் பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கேள்விக்குட்படுத்தப்பட்டு தான் வந்துள்ளது.இன்றைக்கு நாம் என்னதான் பெண்ணியம் குறித்தும் பெண் விடுதலை குறித்தும் பேசினாலும் இன்னமும் பெண்களை ஆணுக்கு நிகரான உயிர்களாய் ஆணாதிக்க உலகம் ஒப்புக்கொள்ளவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.

இன்னமும் நாம் பெண்களுக்கு எதிரான கருத்துகள் உலவும் போது சோசலீச சிந்தனைகளையும்,பெரியாரையும்,பாரதியும்,பாரதிதாசனையும் தான் துணைக்கு அழைக்கிறோம்.இன்றைய சூழலுக்கு ஏற்ப பெண்ணிய சிந்தனையை தூண்டும் வகையிலும் அவர்களுக்கு குரல் கொடுக்கும் வகையிலோ ஒரு ஆணைக்கூட பார்க்கவோ அவரது கருத்தினை மேற்கோள் காட்டவோ நமக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களுக்கெதிரான அநீதிகளுக்கு எதிராகவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் சில பெண்னியவாதிகளும் போராளிகளும் உயிர்ப்பித்துக் கொண்டுதான் இருந்தார்.பெண்கள் சந்தித்த வாழ்வியல் போராட்டங்களும்  சமூகப் பிரச்னைகளும் சமூக மறுப்புகளும் பெண்ணிய் சிந்தனைகள் தோன்ற காரணியமாயின. ஆனால்,அவர்களின் போராட்டங்களும் சிந்தனைகளும் நவீனத்துவத்தாலும் முதலாளித்துவ வியபார விளம்பரங்களாலும் திசைமாறி போய்விடுகின்றன.
இம்மாதிரியான சூழலில்தான் பெண்களின் வேலை நேரத்தை குறைக்கவும்,அவர்களின் ஊதியத்தை உயர்த்த வலியுறுத்தியும் மட்டுமின்றி பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை கோரிக்கையாக முன் வைத்தும் 1908ஆம் ஆண்டு மார்ச் 8நாள் மாபெரும் பேரணி நடந்தேறியதுஇப்பேரணியில் அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கம் மற்றும் இரஷ்ய புரட்சி இயக்கத்திற்கும் பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

உலக மகளிர் நாளை ஐ.நா 1975ஆம் ஆண்டு அங்கீகரித்தது.ஆனால்,1908ஆம் ஆண்டு நடைபெற்ற பேரணிக்கு பின்னர் 1909ஆம் ஆண்டில் மார்ச் 8ஆம் தேதி இந்நாளை தேசிய பெண்கள் நாளாக அமெரிக்க சோசலீஸ்ட் கட்சி அறிவித்தது.அதனை தொடர்ந்து சர்வதேச மகளிர் நாள் அனுசரிக்கப்பட  வேண்டும் என்னும் சிந்தனையை முன் வைத்தவர்  ஜெர்மனிய சேர்ந்த  மார்க்சிய தத்துவவாதியான கிளாரா ஜெட்கின் என்பவராவார்.
பெண்களுக்கான உரிமைகளை கேட்டுப் போராடிய செயற்பாட்டாளரான கிளாரா ஜெட்கின் 1911இல் நடைபெற்ற  சர்வதேச மகளிர் நாள் பேரணிக்கு பெண்களை திரட்டியவராவர்.இவர் உலக  கம்யூனிச இயக்கங்களின் மதிப்புக்குரிய தொழிலாளர் சிந்தனையாளரான ரோஸா லக்ஸம்பர்கின் நெருங்கிய தோழியாவார்.
முன்னதாக 1910ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த  உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் உலக மகளிர் நாள் சிந்தனையை கிளாரா ஜெட்கின் முன் வைத்தார்.அம்மாநாட்டில் 17 நாடுகளை சேர்ந்த சுமார் 100 பெண்கள்  கலந்துக் கொண்டனர் என்பது வரலாறு.கிளாரா ஜெட்கின் ஒரு சர்வதேசப் பெண்கள் தினம் வேண்டும் என்ற யோசனையை முன்மொழிந்தபோது எந்த நாளில் அதைக் கொண்டாடவேண்டும் என்று குறிப்பிட்டு எந்த தேதியையும் கூறவில்லை.

முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, 1917-ம் ஆண்டு ரஷ்யாவில் போர் வேண்டாம், "அமைதியும் ரொட்டியும்"தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி (ஜூலியன் நாட்காட்டியின்படி பிப்ரவரி 23) பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினர். நான்கு நாள்கள் நடந்த இந்தப் போராட்டம், சர்வதேச மகளிர் தினம் என்ற கருத்துக்கு உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது. நான்கு நாள்கள் நீடித்த இந்தப் போராட்டம் கடைசியில் ரஷ்ய மன்னரான ஜார்ஜ் மன்னரை அரியணையை விட்டிறங்குவதற்கான அழுத்தத்தை தந்தது. முடியாட்சியும் முடிவுக்கு வந்தது. முடியாட்சிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது. இந்த மாற்றம்தான், 1917 அக்டோபரில் நடந்த புகழ்பெற்ற ரஷ்ய புரட்சிக்கும், அதன் விளைவாக உலகெங்கும் சோஷியலிஸ்ட் அரசுகள் தோன்றுவதற்கும் முன்னோட்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதை அடிப்டையாகக் கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. எனினும் 1975-ம் ஆண்டில்தான் .நா. மார்ச் 8- சர்வதேசப் பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்தது. அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது .நா. இதன்படி .நா. அறிவிப்புக்குப் பின் வந்த முதல் பெண்கள் தினத்தின் முழக்கம் "சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமையாக சிந்தி" என்பதாகும்.
இன்று உலகம் முழுவதும் மகளிர் நாள் ஒரு கொண்டாட்டம் போல்  கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் அக்கொண்டாட்டத்திற்கு மலேசியா மட்டும் விதிவிலக்கல்ல.மலேசிய பெண்களும் இந்நாளின் உன்னதம் புரியாமல் இன்னமும் அதனை பிறந்தநாள் போலவும் பண்டிகைகள் போலவும் தான் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மலேசியாவில் சமூகம்,அரசியல்,பொருளியல்,தொழில்,ஊதியம் உட்பட அனைத்து துறைகளிலும் அவர்களுக்கான அங்கீகாரமும் உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கூட சிந்திக்காமல் இந்நாளில் கூட வாழ்த்து கூறி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வருத்தமான வேதனை.

எப்படி மே நாளில் தொழிலாளர் வர்க்கம் அதன் முதலாளிகளால் அந்நாளின் உன்னதம் மறைக்கப்பட்டு கேளிக்கையாலும் விளையாட்டுப் போட்டிகளாலும் ஏமாற்றப்படுகிறார்களோ அதுபோல் உலக மகளிர் நாளும் பெண்களின் சிந்தனையை மழுங்கடிக்கவும் அவர்கள் அதுகுறித்த சிந்தனையில் எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக கொண்டாட்டங்களும் பல்வேறு விளம்பரங்களும் முதலாளி வர்க்கத்தின் யுக்தியாய் மாறிப்போனது இங்கு.

இருந்த போதிலும் இந்த உன்னதமான நாளில் சோசலீச சிந்தனை அமைப்புகளும் சில பெண்கள் இயக்கமும் பேரணியை ஏற்பாடு செய்து அதன் வாயிலாக நாட்டில் மகளிர் உரிமைக்காக குரல் எழுப்புவது ஆறுதலாக இருந்தாலும் அப்பேரணியில் கலந்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை என்பது ஏமாற்றமே.சின்ன தீ குச்சியிலிருந்துதான் பெரும் தீ பற்றி எரிகிறது என்பது போல் இந்த சிறு கூட்டம் ஒருநாள் மாபெரும் பேரணியாய் உயிர்த்தெழும் என நம்புவோம்.

பொதுவாகவே,பெண்ணியம்,பெண் சுதந்திரம் குறித்து பேசும் போது அது என்னவோ ஆணுக்கு எதிரானது போலவும் அஃது பண்பாட்டின் சீர்கேடு போலவும் சித்தரிக்கப்படுகிறது.ஒரு விடுதலைக் கோரிக்கையை, அதற்கான உரையாடலைக் கொண்டிருக்கும் எந்த ஒரு கோட்பாடும், ஆதிக்கத்துக்கும் அதிகாரத்திற்கும் எதிரானதாகத்தான் இருக்கும். பெண்ணியம் என்பதும், ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கிடக்கும் பெண்களுடைய விடுதலைக் குரலாகவே கருதப்பட வேண்டும். குறிப்பாகச் சொல்லப்போனால், பெண்ணியம் என்பது, ஆண்களுக்கு எதிரானது அல்ல; ஆணாதிக்கத்திற்கும், ஆண் அதிகார முறைகளுக்கும்தான் எதிரானது. அது பண்பாட்டு சீரழிவு அல்ல.மாறாய்,பெண்ணிய எழுச்சி என்பது அனைவரிடமும் உணர்த்தப்பட வேண்டும்.

வரலாற்றின் முதல் வர்க்க ஒடுக்குமுறை என்பது, பெண் பாலை, ஆண் பால் ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகிறது என்கிறார் ஏங்கல்ஸ். மனித சமூகத்தின் இயங்குதலுக்கு அடிப்படையாக இருப்பது, பொருள் உற்பத்தியும், உயிரின மறு உற்பத்தியும்தான். உற்பத்தியிலும், மறு உற்பத்தியிலும் கட்டுப்பாடு இல்லாது, பெண்கள் ஈடுபட்டிருந்த நிலைமைகள் தாய்வழிச் சமூக அமைப்பில் இருந்திருக்கின்றன. இதற்குப்பின் தோற்றுவிக்கப்பட்ட ஆண்வழிச்சமூக முறைமையில்தான், பெண்களின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்திச் செயல்பாடுகள் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு, சமூகத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் வெளியேற்றப்பட்டதால், அவ்வுற்பத்தி நடவடிக்கையின் மூலம் கொணரப்பட்ட சொத்துக்கள், செல்வங்கள், பொருட்கள், உடைமைகளுக்கு ஆண்களே உரிமை கொண்டாடும் நிலை ஏற்பட்டது.

இதனால், பெண்கள், ஆண்வழிச் சமூகத்தைச் சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது மட்டுமல்லாமல், இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆணின் உடலின்ப  வேட்கைக்குப் பலியான பெண்கள், கேவலம், குழந்தைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான கருவிகளாக மட்டும் ஆக்கப்பட்டனர். மேலும், பொருள் உற்பத்தித்தளம் ஆண்கள் வசம் இருந்ததால், ஆண்களின் சொத்துகளுக்கு வாரிசுரிமை கொண்டாடும் வகையில் சொத்துடைய ஆணின் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பணிக்குப் பெண்கள் ஒதுக்கப்பட்டனர். இக்குடும்ப அமைப்பில், ஒரு பெண், ஒரு ஆணுடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டனஆக, ஆணாதிக்கத்தின் பொருளியல் அடிப்படை என்பது, பெண்களின் உழைப்பு, சக்தி ஆகியவற்றின் மீது ஆண்கள் கொண்டுள்ள அதிகாரமே ஆகும். இதுதான், பெண்கள் ஒடுக்கப்படுவதற்கான வரலாற்றுப் பின்னணியாக நாம் கருதமுடியும்.

இதனை தந்தை பெரியார் தனது பெண்ணிய சிந்தனையில் பல்வேறு நிலைகளில் எடுத்துரைத்து பெண் விடுதலைக்கு அச்சாரம் இட்டுள்ளார். பெண்ணுரிமை என்பது கல்வி,வேலை வாய்ப்பு,மறுமணம்,சொத்துரிமை போன்ற சீர்த்திருத்த அடிப்படையில் மட்டுமின்றி உழைப்பு சுரண்டல் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு உட்பட்ட பெண்களுக்காகவும் அது ஓங்கி ஒலிக்க வேண்டும்.பெரியாரின் சீர்த்திருத்தம் பெண்ணிய புரட்சியின் தொடக்கம் என்றால் சோசலீச  பெண்ணிய சிந்தனை நிலவுகின்ற சமூக அமைப்பையே புரடிப்போடக்கூடிய  புரட்சிகர அரசியலின் உச்சம் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பெண்களை இழிவுப்படுத்துகின்ற பழகத்தை அறிவில்லாத செயலாகவும் மூடநம்பிக்கையாகவும் கருதும் பாரதி “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்”என்கிறார்.ஆணுக்கு பெண் சமம் என்பதில் எந்த பாகுப்பாடும் கொள்ளக்கூடாது என்பதைவும் அவர் தனது கவிதையில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.

இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் உலக மகளிர் நாள் கொண்டாட்டத்தின்  அடிப்படையில் உருவானதல்ல.அஃது போராட்டத்தில் தொடங்கி உலக மகளிரின் உரிமைக்காக குரல் எழுப்பிய உன்னதநாள்.நடப்பில்,சமூகம்,அரசியல்,பொருளியல் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடும் நாளாக இந்நாள் உருவெடுத்திருந்தாலும் பாலின பாகுப்பாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள்,வேலை நிறுத்தங்களில்தான் இந்நாளின் உண்மை வரலாற்று வேர்கள் இறுக்கமாய் பற்றிக் கொண்டுள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

“பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்காத வரை;இந்த உலகம் அவர்களை திரும்பிப் பார்க்காது”

Thursday, 5 March 2020

ஆட்டிசம் நோய் அல்ல – அன்பால் சரிசெய்யக்கூடிய சிறு குறைபாடு மட்டுமே!!


ஆட்டிசம் நோய் அல்ல – அன்பால் சரிசெய்யக்கூடிய சிறு குறைபாடு மட்டுமே!!

ஆட்டிசம் என்பது அன்பாலும் நம்பிக்கையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால் சரி செய்யக்கூடிய சிறு குறைபாடு மட்டுமே என்பதை பெற்றோர்களும் இச்சமூகமும் உணர வேண்டும்.ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அழகான உயிரோவியங்கள்.அந்த ஓவியங்களின் உணர்வுகளை நாம் புரிந்துக் கொண்டால் அக்குழந்தைகளும் இயல்பான வாழ்வை தொடர்வதோடு சாதனையாளர்களாகவும் உருவெடுப்பார்கள் என்பது சாத்தியமானது.
ஆட்டிசத்தை  ஒரு நோயாக கருதுவது விழிப்புணர்வு அற்ற போக்கு.நிஜத்தில் அஃது நோய் அல்ல.அது சரி செய்யக்கூடிய குறைபாடுதான்.இது சரி செய்யமுடியும் என்னும் நம்பிக்கை பெற்றோர்களிடையே உயிர் பெற்றால் அவர்கள் சார்ந்த குழந்தைகளின் எதிர்காலம் நம்பிக்கையானதாக மெய்மம் கொள்கிறது.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது சுயசரிதையில் “எங்களுக்கு நிறைய அறிவு இருக்கு.எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை சரியாக புரிந்துக் கொள்ள முடிகிறது.ஆனால்,அதை  உங்களுக்கு புரிய வைப்பதற்கான  மொழிதான் எங்களுக்கு தெரியவில்லை” என்கிறார்.இதுதான் நிதர்சனமும் கூட.நாம் அவர்களின் மொழியை புரிந்துக் கொண்டால் ஆட்டிசம் என்பது வெறும் வார்த்தைதான்.அது யாருக்கும் பாதிப்பாக அமையாது.
ஆட்டிசக் குழந்தைகளை  உலகம் சம்தப்பட்ட நடப்புமுறை விஷயங்களுக்குள் கொண்டு வருவதும்  அவர்களை பேச வைப்பதும் தான் கடினமான  ஒன்றாக இருக்குமே தவிர அவர்களின் அறிவு திறன் என்பது அளாதியானதாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்களும் பசி,தூக்கம்,வலி உட்பட அனைத்து உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் உட்பட்டாவர்கள் தான்.ஆனால்,அதை வெளிப்படுத்த அவர்களுக்கு வார்த்தைகள் மட்டுமே தெரியாது.
மேலும்,ஆட்டிசம் குழந்தைகள் காது,மூக்கு,வாய்,தொண்டை என  உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாகவே உள்ளனர்.அவர்களிடையே “பேச வேண்டும்” என்னும் எண்ணத்தை அவர்களுக்குள் கொண்டு வந்துவிட்டால் குழந்தைகளை ஆட்டிசத்திலிருந்து எளிதாகா மீட்டும் விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஏன் என் குழந்தை மட்டும் கூப்பிட்டால் என்னை திரும்பிப் பார்க்கல,என் கண்ணை பார்த்துப் பேசல,மற்ற குழந்தைகளோடு  சேர்ந்து சகஜமாக விளையாடல,காரணமே இல்லாமல் அடிக்குதும்கிள்ளுது,ஏன் இத்தனை முரட்டுதனமாக  நடக்குத?” போன்ற கேள்விகள் ஒரு பெற்றோர் மத்தியில் எழுமானால் அக்குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என  மருத்துவம் கூறுகிறது.

ஒவ்வொரு வருசமும் ஏப்ரல் மாததை ஆட்டிசத்தின் மாதமாக கொண்டாடுகிறார்கள். ஏப்ரல் 2ம் தேதியை உலக ஆட்டிச விழிப்புணர்வு தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆட்டிச குறைபாடுடைய குழந்தைகளும் அதன் பெற்றோர்களும் சந்தித்து, உரையாடுவதும் அக்குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதும் மேலைநாடுகளில் வழக்கமான ஒன்றாக இருக்கும் சூழலில் மலேசியாவில் அஃது இன்னும் பெரியதொரு விழிப்புணர்வோடு அணுசரிக்கப்படுவதில்லை என்றுதான் கூற வேண்டும்.

1943ல் டாக்டர். லியோ கானர் (Dr. Leo Kanner) என்பவர்  உலகிற்கு ஆட்டிசம் என்ற வார்த்தையையே அறிமுகப்படுத்தினார். அவர் தனது “அன்பு வளையத்தை சிதைக்கும் ஆட்டிசம்” (Autistic Disturbances of Affective Contact) என்ற ஆய்வறிக்கையை நெர்வஸ் சைல்ட்(Nervous Child) என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். அதில்தான் உலகில் முதன் முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்சனைகள் பேசப்பட்டது.
ஆனால், ஆட்டிசத்திற்கு காரணமாக கானர் கருதியதில் முக்கியமானது,  பெற்றோர்களின் அரவணைப்பை குழந்தைப் பருவத்தில் பெறாததினால் தான் இதன் பாதிப்பு ஏற்படுகிறது என்று பெரிதும் நம்பினார்.  முற்றிலும் தவறான கொள்கை என்று பின்னாளில் தெளிவாக நிறுவப்பட்டு விட்டது என்றாலும் ஆட்டிசம் எனும் குறைபாட்டை முதன் முதலாக வரையரை செய்தவர் என்கிற வகையில் டாக்டர். கானரின் பங்கு மகத்தானது.
ஆட்டிசம் என்பதை மிகத் துல்லியமாக வரையறுக்க முடியாததைப் போலவே அதற்கான சிகிச்சை முறைகளையும் அறுதியிட்டு கூற முடிவதில்லை. ஒருவருக்குப் பயனளிக்கும் சிகிச்சை மற்றொரு குழந்தைக்கும் பயன் தரும் என்பது நிச்சயமில்லை. எனவே இதற்கான சிகிச்சையைத் தேர்வு செய்யும் பொறுப்பு ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோரிடமே இப்போதைக்கு உள்ளது. இது ஒரு பெரிய ஆயாசத்தையும், குற்றவுணர்வையும் அவர்களுக்கு உருவாக்குகிறது.

தம் குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானால் என்னமோ,ஏதோவென்று பெற்றோர்கள் பதறக்கூடாது.இதை பெரும் மனநோயாக கருத்திடக்கூடாது.இது மன வளர்ச்சி தொடர்பிலான சிறூ குறைபாடுதான் என்பதை உணர்ந்துக் கொள்வதோடு ஆரம்பத்திலேயே சரியான பயிற்சியையும் வழிமுறைகளையும் கையாண்டால் அதனை சரி செய்ய முடியும் என்னும் நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டும்.
மலேசியாவில் ஆட்டிசம் குழந்தைகளை பராமரிக்க  அரசாங்க மையங்கள்  இருந்தாலும்,அங்கு பயிற்சியளிக்க  போதிய பயிற்சியாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மலேசியாவில் ஆட்டிசம் குழந்தைகளை பராமரிக்க அமைக்கப்பட்டிருக்கும் மையங்களில் திறன் மிக்க பயிற்சியாளர்களை அரசாங்கம் நியமிக்க வேண்டும்.,அதற்கான பயிற்சிகளை தன்னார்வாலர்களும் அம்மையங்களின் பராமரிப்பாளர்களும் பெற்றிருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

கடந்த 2014ஆம் ஆண்டில் புள்ளியல் விபர அடிப்படையில் மலேசியாவில் சுமார் 47,000 பேர் ஆட்டிசம் குறைபாடுடன் இருப்பதாகவும் நாட்டில் பிறக்கும் 600 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசத்தோடு பிறப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.வளர்ந்த நாடுகலில் 68 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாடுடன் பிறப்பதாகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகிறது.மேலை நாடுகலோடு ஒப்பிடுகையில் மலேசியாவில் இன்னமும் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு ஆக்கப்பூர்வமாகவும் விரிவாகவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை.
ஆட்டிசத்துக்குக் குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமில்லை. அன்பும் அரவணைப்புமே இதற்கான மருந்துகள். இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான் அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள். எனவே, இவர்களோடு நாம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்; பூங்கா,  கடற்கரை, பொருட்காட்சி போன்ற வெளி இடங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்.

முதலில் பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல், தூக்கம் போன்ற தினசரிப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தப் பயிற்சிகள் தர வேண்டும். குழந்தைக்குப் புரியும் விதமாக நிறையப் பேச வேண்டும், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல்,ஓவியம் வரைதல், யோகா போன்ற பயிற்சிகள் தரப்பட வேண்டும். இந்தப் பயிற்சிகள் அவர்களின் உடல் திறனை அதிகப்படுத்து வதுடன், தத்தம் வேலை களைத் தாமே சுயமாகச் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை யையும் தரும்.

இந்தக் குறைபாட்டின் ஆரம்ப கட்டத்திலேயே மொழிப் பயிற்சிக்கும் பேச்சுப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். உளவியல் சார்ந்த பயிற்சிகள், கல்விக்கான பயிற்சிகள், அறிவுத் திறன் பயிற்சிகள் போன்றவற்றையும் முறைப்படி தர வேண்டும். பேச வேண்டும், பழக வேண்டும் என்பது போன்ற எண்ணங் களைக் குழந்தையிடம் ஏற்படுத்துவதற்குத் பெற்றோர்களின் பங்கு மட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது.

ஆட்டிசம் இந்த மதம் சார்ந்து,இனம் சார்ந்து,மொழி சார்ந்துதான் வரும் என்பதில்லை.அஃது பணக்காரனுக்கும் வரலாம்,ஏழைக்கும் வரலாம்.கற்றவனுக்கும் வரலாம்,கல்லாதவனுக்கும் வரலாம்.”Down’s Syndrome எனப்படும் மூளை வளர்ச்சி சம்மதப்பட்ட குறைப்பாட்டை காட்டிலும் ஆட்டிசம் இன்றைக்கு பெரும் பரவலாக உருவெடுத்து வருகிறது.இது பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு தான் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அக்குழந்தைகளிடம் அன்போடு நம்பிக்கையையும் விதைக்க வேண்டும்.அப்போதுதான் உயிரோவியமாய் விளங்கும் அக்குழந்தைகள் தங்களுக்கான வாழ்வியல் ஓவியத்தை நம்பிக்கையோடு வரைய முடியும்.உலகிற்கு மின்சாரம் வழி வெளிச்சத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகிற் அளித்த தோமாஸ் அல்வா எடிசன் கூட ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர் தான்.அவரை போல் பல அறிவுஜீவிகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு பின்னர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர் என்பதை பெற்றோர்கள் புரிந்துக் கொண்டு நம்பிக்கையோடு அக்குழந்தைகளை அரவணைக்க வேண்டும்.
ஆட்டிசம் நோய் அல்ல என்பதால் அதற்கு மருந்தும் இல்லை.பெற்றோர்களின் அதீத அன்பும் நம்பிக்கையும் தான் அச்சிக்கலிலிருந்து அக்குழந்தைகளை மீட்டு இயல்பு வாழ்க்கை வாழ வழி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.ஆட்டிசம் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களே சிறந்த பயிற்சியாளர்களும் சிறந்த ஆசிரியர்களும் ஆவர்.இதனை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்தால் ஆட்டிசம் அக்குழந்தைகளுக்கு அந்நியமாக்கி இயல்பு வாழ்க்கைக்கு அக்குழந்தைகளை வித்திடும்.

மலேசியாவில் ஆட்டிசம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த 2017ஆம் ஆண்டில் தாமாஸ் அல்வா எடிசனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு “சிலரது வாழ்வில் ஒளியேற்றுவோம்” (light of some one’s life) என்ற தலைப்பில் ஒரு இணையப் படம் வெளியீடு கண்டதும் ஆட்டிசம் குழந்தைகளுக்கான நிதியுதவிக்காக பாடகி திலா லக்‌ஷ்மண் “ஜன்னம்” என்னும் தனிப்பாடல் ஒன்றையும் வெளியீடு செய்திருந்தார் என்பதும் இங்கு நினைவுக்கூறத்தக்கது.

மலேசியாவில் ஏய்ட்ஸ்,புற்றுநோய்,மார்பக புற்றுநோய் ஆகியவற்றுக்கு கொடுக்கப்பட்ட விழிப்புணர்வுகள் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததால் அது குறித்த விழிப்புணர்வு தற்போது சரியான இலக்கில் பயணிக்கிறது.ஆனால்,ஆட்டிசத்திற்கு இன்னும் அவ்வாறான ஆழமான அல்லது விரிவான விழிப்புணர்வு இல்லை.அதனை ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும்.
ஏப்ரல் 2ஆம் தேதி மட்டும் ஆட்டிசம் நாள் என நீலசட்டையோடு கைகோர்ப்பதை மட்டும் இலக்காக கொண்டிருக்காமல் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வும் அது குறித்த நிகழ்வுகளும் எல்லாக் காலக்கட்டத்திலும் அரசாங்கம் வாயிலாகவும் தொண்டு நிறுவனங்கள்,தன்னார்வாலர் அமைப்புகள் ஏற்படுத்தி மலேசியர்களிடையே விழிப்புணர்வை மையம் கொள்ள வைக்க வேண்டும்.

மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்பாட்டால் ஆட்டிசம் பெரும் பிரச்னையே இல்லை.ஆட்டிசம் குழந்தைகளுக்காக மலேசியர்கள் அனைவரும் வாரத்தில் ஒருநாள் நீல நிறசட்டையோடு களமிறங்கி அதனை தேசிய நிகழ்வாய் உயிர்பிக்க செய்தால் விழிப்புணர்வு நாளைய தலைமுறைக்கும் சரியாக கொண்டு செல்லப்படும்  என்பது கோரிக்கை.இதனை அரசாங்கமோ அல்லது ஆட்டிசம் தன்னார்வ அமைப்புகளோ முன்னெடுக்க வேண்டும் என்பதை இக்கட்டுரையின் வாயிலான கேட்டுக் கொள்கிறேன்.


மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!!

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!! மலேசியாவில் வாழ்ந்த வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்திர இடத்தை தங்களின் தனி...