Thursday, 20 February 2020

தாய் மொழி பேசாத இனம் தரணியில் மடிந்து போகும்!!



பிப்ரவரி 21 உலக தாய்மொழி நாள் என்பதை யாவரும் அறிவர்.21 பிப்ரவரி 1952இல் வங்கமொழியை அரசு மொழியாக அறிவிக்க வேண்டி வங்காளதேசதில் நடத்தப்பட்ட போராட்டத்தில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் உயிர் நீத்தனர்.அந்த நான்கு மாணவர்களின் நினைவாக யுனோஸ்கோ 21 பிப்ரவரியை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது.1999ஆம் ஆண்டு 21 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் 2000ஆம் ஆண்டிலிருந்து உலக தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டின் அடிப்படையில் உலக முழுவதும் யுனோஸ்கோ மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் உலகில் பேசப்படும் 6 ஆயிரம் மொழிகளில் மாதத்திற்கு 2 மொழியும் அதன் பண்பாடும் அழிந்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவலை அஃது வெளியீடு செய்திருந்ததோடு மட்டுமின்றி உலகில் 40 விழுகாட்டினர் தங்களின் தாய்மொழியில் கல்வியை கற்கவில்லை என்றும் எச்சரித்துள்ளது.

உலகில் எந்தவொரு இனம் அதன் தாய் மொழியை பேச மறுக்கிறது அல்லது பேச தவறுகிறது அந்த இனம் இந்த தரணியில் மடிந்து போகும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.மொழி அழிந்தால் இனம் அழியும்.ஒரு இனத்தின் அடையாளமும் அதன் உயிரும் தாய் மொழிதான் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் பெரும் படைகளும் போர் வீரர்களும் தேவையில்லை. அந்த இனத்தின் மொழியை அழித்தாலே அந்த இனம் மடிந்துவிடும் என்பது நிதசன் உண்மை.

ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தாயின் ஒலியை தாய்மொழி வடிவில்தான்  முதலில் அறிகிறது.தாய்மொழி என்பது வெறும் பேசும் மொழியல்ல.அஃது தாயின் கருவறையில் சுவாசித்த முதன்மொழி என்பதை நாம் மறந்திடக்கூடாது.

ஒவ்வொரு இனத்திற்கும் அவர்களின் தாய்மொழியானது பெருமிதமான அடையாளத்திற்குரியது.ஆனால்,நாகரிகம் என்னும் பெயரில் இன்றைக்கு தாய்மொழியில் பேசுவது பெரும்பான்மை இனங்களுக்கு அந்நியமாகி விட்டது.மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை மறந்துவிட்ட சமூகங்கள் உலகில் இன்றைக்கு தாய்மொழியை தொலைத்து நிற்கின்றன.

உலகளாவிய நிலையில் இன்றைக்கு எத்தனையோ மொழிகள் அழிந்துவிட்டன.அவை அழிந்ததற்கு அந்த மொழிக்கு உரிய இனம் தான் காரணியம்.தாய்மொழியை பேசவும் எழுதவும் முற்படாத அதனை பயன்படுத்தாத நிலையில் தான் இங்கு மொழிகள் தொலைந்தன என்பது வரலாறு.அந்த வகையில் கல்தோன்றி மண்தோன்றா முன் தோன்றிய மூத்தகுடியான தமிழினத்தின் பெருமையை தாய்மொழியாம் நமது தமிழ் மொழியே உயர்த்தி பிடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் மொழி தொன்மையும் உலகில் நனித்துவமான பெருமையும் கொண்ட மொழி.உலக நாடுகளில்  நடப்பில் சுமார் 6 ஆயிரம் மொழிகள் பயன்பாட்டில் இருந்ட்தாலும் அதில் தொன்மையும் நனிசிறப்பும் மிக்க  மொழியாக விளங்கும் தமிழ் மொழி 94நாடுகளில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.இத்தகைய பெருமைகுரிய மொழிக்கு சொந்தக்காரர்களான நாம் அதன் மீது பற்றும் கர்வமும் கொண்டிருக்க வேண்டாமா?

உலகில் அனைவரும் தத்தம் தாய்மொழியில் பேசுகிறார்கள்.ஆனால்,தமிழர்களோ மொழிகளின் தாய்மொழியில் பேசுகிறார்கள் என்னும் பெருமைக்குரிய நிலையில் வாழும் தமிழர்கள் தமிழில் பேசுவதை பெருமிதமாக கருத வேண்டும். தாய்மொழி பேசாத நாக்குகள் அறுத்தெறியப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் வீடுகளில் கூட தாய்மொழி பேசுவது குறைந்து விட்டது.அனைவரின் நாக்குகளிலும் அந்நியமொழி ஆக்கிரமித்து விட்டது.  “மாற்றான் மொழி வீட்டில் சிரிக்க தாய் மொழி தெருவில் அழுகிறது” என்பதுதான் இன்றைய வாழ்வியல் நிஜம்.பூனையும் நாயும் கூட தன் மொழியில் பேசும் போது தமிழா நீ மட்டும் ஏன் அந்நிய மொழியில் பேசுகிறாய்? பல மொழிகள் பேசிய பாரதிகூட ‘’யாம் அறிந்த மொழிகளிலேயே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றார்.

தமிழ்மொழி ஏனைய மொழிகளை விட நீண்ட இலக்கணம் இலக்கிய  மரபுகளை கொண்டது.செம்மொழியாக விளங்கிடும் தமிழ் மொழி தொல்காப்பியம், நன்னூல்,முத்தொள்ளாயிரம், பதினென்மேற்கணக்கு ,பதினென்கீழ்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், பெரியபுராணம், திருக்குறள் என எண்ணிலடங்கா பெரும் நூல்கள் தமிழ்மொழியின் சிறப்பின் சான்றாகவும் அதன் தொன்மையின் சான்றாகவும் இன்றைக்கும் உயிர்ப்பித்திருக்கிறது.

நிலவில் மனிதன் வாழ்ந்திருந்தால்கூட அங்கு தமிழன் தான் வாழ்ந்திருக்ககூடும் என ஆய்வாளர்கள் கூறும் நிலையில் உலகின் முதல் மனிதன் தோன்றிய குமரியகண்டத்தின் முதல் மனிதன் தமிழந்தானே.அவன் பேசிய மொழி தமிழ்தானே என பெருமைக் கொள்ளும் சூழலில்  உலகின் மூத்தமொழி தமிழ்தான் என்பதில் கிஞ்சீற்றும் ஐயமில்லை.

தாய்மொழி என்பது நம் உணர்வின் மொழி.அது வெறும் பேச்சிற்கும் எழுத்திற்குமான மொழியல்ல.நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு நுகர்விலும் தாய்மொழியின் வாசம் நிறைந்திருக்க வேண்டும்.உலகில் இருக்கும் எந்த மொழிகளின் இலக்கியத்தையும் உணர்ச்சி,பொருள்,நயம்,வடிவம்  குன்றாமல் மொழி பெயர்த்து விடலாம்.ஆனால்,தமிழை அப்படியே பிரதிபலிக்க வேறு எந்த மொழிகளாலும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இனத்தின் பெருமையும் அதன் அடையாளத்தையும் தாங்கி நிற்கும் தாய்மொழியை பேணிக்காக்க வேண்டியது ஒவ்வொரு இனத்தின் தனித்துவ கடமையாகவும்.மொழி உயிர்ப்பித்தால் தான் அது சார்ந்த இனம் வாழும் என்பதை நாம் மறந்திடகூடாது.வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.உலக தாய் மொழி நாளில் தாய்தமிழை போற்றி தாய் மொழியை பெருமிதமாக உயர்த்தி நிற்பதே ஒவ்வொரு தமிழனின் பெரும் கடமை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பையும் தொன்மையையும் நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.6 ஆயிரம் மொழிகளுக்கு மேல் இருக்கும் இப்புவியில் சில மொழிகள் மட்டுமே எழுத்து மொழியாகவும் பேசும் மொழியாகவும் உள்ளன.அவற்றில் மூலமொழிகளாக கருதப்படும் ஆறு மொழிகளில் தமிழும் சீனமும் மட்டுமே இன்னும் எழுத்து மொழியாகவும் பேசும் மொழியாகவும் உள்ளது.
எபிரேய மொழி,இலத்தின் மொழி,சமஸ்கிருத மொழி ஆகியவை நடப்பில் அதன் பேச்சு மொழியை இழந்து வெறும் எழுத்து மொழியாக மட்டுமே உள்ளன.இது நாளடைவில் அதன் அடையாளத்தை தொலைந்து மரணித்துப் போகும் என்பது வருத்தமானதே.இந்நிலை ஒருபோது தமிழுக்கு வராமல் இருக்க வேண்டுமானால் தமிழர்கள் செம்மொழியான தாய்மொழியில் பேசியும் எழுதியும் வாழ்வதோடு தொடக்கக்கல்வியை தாய்தமிழில் கற்கவும் வேண்டும் என்பது காலத்தின் அவசியமாகிறது.
தமிழுக்கு அமுதென்றி பேர்!-அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதும்,தமிழ்மொழி எவ்வளவு சிறப்பும் தொன்மையும் இனிமையும் வாய்ந்தது என்றூ ஒப்புநோக்க தக்கது. தமிழ் மொழியை வெறும் மொழியாக மட்டும் வரையறுக்க முடியாது. அது தமிழினத்தின் தாயாகவும் அந்த இனத்தின் பண்பாட்டையும்,பாரம்பரியத்தையும் வாழ்வியல் சான்றையும் மெய்பிக்கும் அதிசயமாகவும் உயர்ந்து நிற்கிறது.

தொன்மை தமிழ், இலக்கிய வளமும் இலக்கண நுட்பமும் கொண்ட மொழியாக திகழ்ந்து வருகிறது. தமிழின் தொண்மையை ஆராய்ந்து கண்டறிந்த  மொழி ஆராய்ச்சியாளர்கல் தமிழ்மொழி சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையதாக அகல்வாராய்ச்சியின் வழி நிருபித்துள்ளார்கள்.

முச்சங்கள் அமைத்து மொழி வளர்த்த பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. அவற்றை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என பகுத்து தமிழை வளர்த்திருக்கிறார்கள். அகத்தியம் எனும் நூல் முதற்சங்கத்தில் தோன்றிய முதல் நூலாக கருதப்படுகிறது. தொல்காப்பியம் இடைச்சங்கத்தில் தோன்றிய நூலாக கருதப்படுகிறது. திருக்குறள், குறுந்தொகை போன்ற நூல்கள் கடைச்சங்க நூல்களாக கொள்ளப்படுகின்றது.

சங்க இலக்கியங்கள் அகம், புறம் எனும் இருப்பிரிவுகளாக புலவர்களால் பாடப் பட்டிருக்கின்றது. கலவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை ஆகியவற்றை அகப்பாடல்களில் நிரம்பியிருப்பதைக் காணலாம். மன்னர் ஆட்சி முறை, வீரம், புலமை போன்றவை புறப்பாடல்களில் வெளிபடுவதை உணரலாம். இத்தகைய பிரிவுகளைக் கொண்டு வாழ்க்கைக்கு வேண்டிய நற்சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் தமிழர்கள் சங்க இலக்கியம் தொடங்கி இன்று பல பரிணாமங்களை கடந்து, காலத்தை வென்று நிற்கிறது என்றால் இம்மொழியின் சிறப்பை என்னவென்று கூறுவது. எனவே, தமிழை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மாதவம் செய்திருக்க வேண்டும் என்றால் அது மிகையாகாது.

தமிழை கற்று,அதன் இனிமையிலும் தொன்மையிலும் காதல் கொண்டு வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவரெல்லாம் பின்னாளில் தன் கல்லறைக்கும் தமிழை சுமந்து சென்றவர்கள் இங்கு உண்டு.ஆனால்,வேறு மொழி கற்ற எந்த தமிழனும் வேறு மொழியை சாகும் வரை கொண்டாடி மகிழ்ந்ததில்லை என்று மெய்சிலிர்க்க கூறலாம்.

அவ்வாறு தமிழை நேசித்து இயறை பெயரை கூட மாற்றிக் கொண்டு தமிழனாகவே வாழ்ந்தவர்களில் Constantine Joseph Beschi என்னும் வீரமாமுனிவரும் அடங்குவார்.தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளை செய்துள்ள இவர் 23 நூல்களை தமிழில் எழுதியுள்ளார்.அவர் எழுதிய தேம்பாவணிஅவரது தமிழ்ப் புலமைக்கு சான்றாக பெருங்காவியமாக இன்றைக்கும் போற்றப்படுகிறது.

தாய்மொழியை உயிராய் மதிப்பவர்கள் தமிழர்கள்.வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனித்துவ பெருமை தமிழுக்கு மட்டுமே உள்ளது. ஆம்,இந்த மொழிக்கு சொந்தக்காரனும் தன் பெயரில் தனது தாய்மொழியை இணைத்துக் கொள்வதில்லை. ஆனால், தமிழர்கள் தமிழ் செல்வம்,தமிழரசி, தமிழினியன், என தன் தலைமுறைக்கே தாய்மொழியை பெயராய் சூட்டி மகிழ்ந்தான் என்பது  பெருமைக்குரிய விடயம் தானே.

இத்தகைய பெருமையெல்லாம் சுமந்து நிற்கும் தமிழ் மொழியை மறந்து அந்நிய மொழியில் பேசுவதும் கற்பதும் எவ்வளவு பெரிய துரோகம் அது என்பதை தமிழர்கள் உணர வேண்டாமா?தமிழன் வாயில் அந்நிய மொழி உதிர்ப்பதை தாங்க முடியாத பாவேந்தன்;

  மம்மி என்றது குழந்தை;அம்மா என்றது கன்று!
                                   ஆங்கிலம் கலந்து தமிழ் பேசாதே!
                                    அன்னை முகத்தில் கரி பேசாதே!
                                    சூடு சொரணை கொஞ்சமும் இல்லை;
                                    சொல்லடா நீயா தமிழின் பிள்ளை?

என்று ஆவேசமாக திட்டுகிறார்.தமிழின் பெருமையை எடுத்துரைக்கிறார்.மேலும்,தேவையின்றிப் பிறமொழிச் சொற்களைத் தமிழில் கலப்பதை வேண்டுமென்றே ஆதரிப்பதும்,தமிழுக்குரிய சிறந்த வரிவடிவத்தைச் சிதைத்து இழி வழக்குகளை எழுத்து மொழியில் புகுத்துவதும் தமிழ்ப் பகைவர் செயல் என்றும் எச்சரிக்கிறார் மொழிஞாயிறு ஐயா பாவாணார் அவர்கள்.
தமிழ் மொழி உயிர்நாவில் உருவான உலகமொழி.இலக்கண செம்மையில் வரமே இல்லா வாய்மொழி.உலக தாய்மொழி நாளான இன்று நாம் நமது தாய்மொழியை போற்றுவோம்.தமிழை நேசிப்போம்.தமிழோடு வாழ்வோம்.

தமிழன் என்றொரு இனமுண்டு
அவனுக்குத் தனியொரு குணமுண்டு
அமிழ்தம் அவந்தம் மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்!!

என்ற உன்னதம் போற்ற நாம் நமது தாய்மொழியாம் உலக செம்மொழியான தமிழோடு பயணிப்போம்.








மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!!

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!! மலேசியாவில் வாழ்ந்த வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்திர இடத்தை தங்களின் தனி...