மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!!
மலேசியாவில் வாழ்ந்த வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்திர இடத்தை தங்களின் தனித்துவங்களாலும்,எழுத்தாற்றல்களாலும் மட்டுமின்றி தங்களுக்கே உரிய சிந்தனை உயிர்மங்களாலும் உயர்த்திப் பிடித்துள்ளவர்களில் பலரை நாம் பட்டியலிட முடியும்.
இன்று நம்மிடையே எத்தனையோ புதுக்கவிதைகள் ஆளுமைக் கொண்டிருந்தாலும் மரபுக் கவிதைகான தனித்துவமும் அதன் சிறப்பும் இன்றைக்கும் நனி சிறப்போடு உயர்ந்து நிற்பதை நாம் காண்கிறோம்.இருந்த போதிலும் தங்களின் எழுத்துக்களாலும் வேறுபட்ட சிந்தனையாளும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒருசில கவிஞர்கள் நம்மோடு பயணிப்பார்கள்.
அவ்வாறு பயணிக்கும் கவிஞர்களில் சிலர் மட்டுமே அவர்களின் காலங்கள் கடந்தும் கவிதை உலகில் தங்களுக்கான தனித்துவ அடையாளங்களுடன் தலைமுறைகள் தாண்டி கவிதையாக வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.அத்தகைய சிறப்புக்குரிய கவிஞர்களில் ஒருவராக மலேசிய கவிதை உலகில் இன்றைக்கும் உச்சரிக்கும் பெயராக கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி விளங்குகிறார்.
தனது அனல் பறக்கும் பேச்சாலும் சமூக சிந்தனை மிக்க கவிதைகளாலும் மக்கள் மத்தியில் தனித்துவ கவிஞராய் உலா வந்தவர்தான் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி என்னும் சமூக கவிதை.இவரது கவிதை சமூகத்தின் உணர்வுகளை தட்டியெழுப்பும்.இவரது எழுத்துக்கள் நம் சமூகத்தை செதுக்கும் உளியாகவே தன் கடமையை செய்யும்.
மலேசிய எழுத்தாளர்களில் தனக்கான தனித்துவ இடத்தை நிறப்பிக் கொண்ட இவர் தீவிரச் சமுதாயச் சிந்தனையாளராகவும் பகுத்தறிவை தனது வாழ்வியல் கொள்கையாகவும் கொண்டு வாழ்ந்தவர்.நாட்டின் தலைச் சிறந்த மரபுக் கவிஞர்களில் ஒருவராக மெய்மம் கொண்ட தீப்பொறி பொன்னுசாமி யாப்பிலக்கணத்தில் தலைசிறந்தவர் என்பது கவிஞர்கள் மத்தியில் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
கோலாசிலாங்கூர் அருகிலுள்ள புக்கிட் ரோத்தான்,ரோஸ்வெல் தோட்டத்தில் பிறந்த இவர் அத்தோட்டத்தின் தமிழ்ப்பள்ளியில் தனது ஆரம்பக்கல்வியையும் கற்றார்.பள்ளி படிப்படை முடித்த பின்னர் சிறிதுக்காலம் தான் பிறந்து வளர்ந்த தோட்டத்திலும் அருகிலுள்ள மேரி தோட்டத்தில் பணி செய்த அவர் அதனை அடுத்து பத்தாங் பெர்ஜூந்தாயில் ஈயச் சுரங்கத்திலும் வேலை செய்துள்ளார்.
தன்மானத்தின் சின்னமாகவும் சுயமரியாதையை பின்பற்றும் பகுத்தறிவின் முகவரியாகவும் திகழ்ந்த இவர் தோட்டத்தில் வாழ்ந்த காலத்திலேயே தந்தை பெரியாரின் எழுத்துகள்,சிந்தனைகள் மற்றும் அவரது பேச்சுகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.பெரியார் மீது கொண்ட ஈர்ப்பால் மலேசிய திராவிடக் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டு சாதி ஒழிப்பு போராட்டங்களிலும்,சீர்த்திருத்த திருமணங்கள் மற்றும் பகுத்தறிவு கலந்தாய்வுகளிலும் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார்.
பேனா முனையால் தனது சிந்தனைகளுக்கு தீனிப்போட்ட இவர் தனது சிந்தனைகளை தீப்பொறியாய் சிறக்கடிக்க வைத்தவர்.இவர் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் சமூகத்தை தட்டியெழுப்பும் போர்வாலாகவே இருந்தன.நம் சமூகத்தின் அவலங்களை சுட்டிக்காட்டவும் அவர்களை தட்டியெழுப்பவும் ஒருபோதும் தயங்கிடாத சமூக சிந்தனையாளராகவே வாழ்ந்த மகத்தான கவிஞர் இவர்.
முன்கோபம் கொண்ட கவிஞனான இவர் தனது கருத்தில் எப்போதுமே உறுதியாக நிற்ககூடியவர்.இவரோடு முரண்பாடுகள் கொண்டவர்கள் கூட இவரது எழுத்துகளை விரும்பி நேசித்த வித்தகராய் உலா வந்துள்ளார்.வனொலி கவியரங்களிலும் மேடைகளில் நடைபெறும் கவியரங்களிலும் பங்கெடுத்தும் தனது பங்கை நிறைவாகவே ஆற்றியுள்ளார் என்னலாம்.
இவரோடு ஒத்த சக கவிஞர்களும் எழுத்தாளர்களும் இவரை சுயநலத்திற்கு அப்பாற்பட்ட தமிழர்களின் தாகத்தைத் தனது மூச்சாக கொண்டிருந்த நமக்கான பாரதியார் இவர் என்றே கீர்த்தி பாடுகின்றனர்.இவரது பகுத்தறி சிந்தனையும் மூடநம்பிக்கை ஒழிப்பும் இவரை மலேசிய நாட்டு பாரதிதாசன் என்றுதான் புகழாரம் சூட்ட வேண்டும்.
பத்திரிக்கையாசிரியரான இவர் தொடக்கத்தில் தமிழ் நேசன் நாளிதழில் பிழைத்திருத்தும் பகுதியில் வேலை செய்து வந்தார்.பின்னர் உயர்வோம் இதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்து வந்துள்ளார்.மேலும், நண்பன் பத்திரிக்கையில் பிழைத்திருத்தும் பகுதியிலும் தமிழோடு பயணம் செய்துள்ளார்.
நாட்டில் நல்ல தரமான கவிஞர்களை உருவாக்க வேண்டும் என்னும் வேட்கையில் பொன் பாவலர் மன்றம் உருவாக்கி அதன் மூலம் கவிஞர் பட்டறையை நடத்தி யாப்பிலக்கணம் அறிந்த நல்ல மரபு கவிஞர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.இவரது பாசறையில் உருவானவர்கள் இனறைக்கும் தங்களின் பெயருக்கு முன் தங்களின் வழிகாட்டியான தீப்பொறி பொன்னுசாமியை நினைவுக்கூறும் வகையில் “பொன்” என்ற சொல்லை பயன்படுத்துவதை நாம் காணலாம்.
தனது தமிழ் இலக்கியத்துறை பயணத்தை 1965 முதல் தொடங்கிய இவர் பெரும்பாலும் சிறுகதைகள்,கட்டுரைகள்,வானொலிக் கட்டுரைகள் என தொடர்ந்தாலும் இவர் இந்நாட்டில் கவிதைகளின் முகவரியாகவே போற்றப்பட்டு நாட்டின் நனி சிறப்பு மிக்க கவிஞர்களில் ஒருவராகவே அடையாளப்படுத்தப்படுகிறார்.மேலும்,இவர் எழுதிய அதிகமான இசைப்பாடல்கள் உள்ளூர்ப் பாடகர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டு இசைநாடா மற்றும் குறுந்தட்டு வடிவங்களில் வெளியீடும் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அனல் பறக்கக்கூடிய கவிதைகளுக்கு சொந்தக்காரரான இவருக்கு மலேசிய திராவிடக் கழகம் “தீப்பொறி” என்னும் விருது வழங்கி பெருமைப்படுத்தியது.பின்னாளில் அதுவே அவரது அடைமொழியாகவும் முகவரியாகவும் ஆனது.அவரது முதல் நூலின் பெயரும் தீப்பொறி என்பது குறிப்பிடத்தக்கது.இந்நாட்டு கவிஞர்களுக்கும் கவிதை உலகத்திற்கும் இவர் பொக்கிசமாக ஐந்து கவிதை நூல்களை கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி,அவர் எழுதிய இந்திய இரயில் பயணங்கள் (பயணக் கட்டுரை),கோம்பாக் ஆறு மற்றும் கவியரங்கில் ஒரு கவிஞர் ஆகியவை வாசிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தவைகளாக தனித்து நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.தனது எழுத்துகளுக்காக பலவேறு பரிசுகளை பெற்றிருக்கும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி 1983இல் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் டான்ஶ்ரீ ஆதி.நாகப்பன் விருதும் 1998இல் கூட்டுறவுச் சங்கக் கவிதை போட்டியில் பரிசும் பெற்றுள்ளார் என்பதும் பெருமிதமானது.
தனது கனல் கக்கும் வார்த்தைகளால் கவிதைகளை மெய்பித்து வாழ்ந்த கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி 1946இல் டிசம்பர் 22 பிறந்தது தமிழகத்தின் தனது சொந்த ஊரான செஞ்சியில் தனது 69வது அகவையில் 2014இல் நவம்பர் 18ஆம் தேதி உடல் நலக் குறைவினால் இயற்கை ஏய்தினார்.இவருக்கு மின்னல் வானொலி அறிவிப்பாளர் பொன் கோகிலம் உட்பட பொன் கோமகன்,பொன் கோமளம் என மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்தும் கவிதையாய் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி மலேசிய மண்ணின் கவிதை பொக்கிசம்.அவரது கவிதைகள் அவரது சுவாசமாய் இன்னமும் வாசிக்கப்பட்டுக் கொண்டுத்தான் இருக்கிறது என்பதை பெருமையாய் பதிவு செய்வோம்.
(சிவாலெனின்)