Monday, 10 April 2017

ஆசிரியர்களை மன நோயாளிகளாய் மாற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளி தலைமைத்துவங்கள்


ஆசிரியர்களை மன நோயாளிகளாய் மாற்றிக்கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளி தலைமைத்துவங்கள் – இயல்பியல் தன்மையை தொலைத்து விட்ட தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்.

   இன்றைய சூழலில் தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களை உருவாக்கும் களங்களை தாண்டி யு.பி.எஸ்.ஆர் தேர்வில் “ஏ”க்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.இதில் மாணவர்கள் ஒரு புறம் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களோ பெரும் மன அழுத்தத்திற்கு தங்களை அறியாமலேயே ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்களின் இயல்பியலை தொலைத்துக் கொண்டு தங்களின் பணியினை செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை.தலைமையாசிரியர்கள் பெரும்பான்மை பள்ளிகளில் பள்ளியின் ஆசிரியர்களை மனிதர்களாய் கூட கருதுவதில்லை என்பதுதான் உண்மை.பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் பள்ளியின் அடைவு நிலையை உயர்த்தவும் ஆசிரியர்களை கசக்கி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தலைமையாசிரியர்கள்.
ஆசிரியர்களின் தேவைகள் கண்டறியப்படுவதில்லை.அவர்களின் உணர்வுகளும் தேவைகளும் தமிழ்ப்பள்ளி தலைமைத்துவங்களால் குழித்தோண்டி புதைக்கப்படுவதை வெளிப்படையாகவே காண முடிகிறது.சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மாற்றங்களுக்கு விண்ணப்பம் செய்யும் போதும் ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு போய்விடலாம் என புலம்பும் போதும் அஃது வெளிப்படுவதோடு ஆசிரியர்களின் வேதனைகளை விவரிக்கை வார்த்தைகள் கூட சில வேளைகளில் தடுமாறிக்கொண்டுதான் இருக்கிறது.
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்களின் பணியினை அர்ப்பணிப்புடனுடம் சந்தோசத்துடனும் தொடர்ந்த காலமெல்லாம் கடந்து விட்டது.இன்றைய சூழலில் கட்டாயத்தின் சூழலில் சூழ்நிலை கைதியாய்தான் ஆசிரியர்கள் தங்களின் பணியை செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது நிலா4யு.காம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது அதிர்ச்சியான தகவலாகும்.
சிலப்பள்ளிகளில் சக ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளகூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.ஆசிரியர்கள் ஒன்றாக உணவு எடுக்க செல்லக்கூடாது,ஆசிரியர்கள் அறையில் பேசக்கூடாது போன்ற எழுத்தப்படாத சட்டங்களும் இருப்பதும் பெரும் வேடிக்கையானது.அதிலும்,புதிதாக ஆசிரியர் துறையில் கால் பதிப்பவர்களின் நிலையோ பெரும் சோகம் நிறைந்தது.தலைமைத்துவத்தின் எழுதப்படாத நவீன அடிமைகளாய் அவர்கள் தங்களின் பணியை தொடங்குகிறார்கள்.அவர்களின் அடைவு நிலைக்காக முடிவு தலைமையாசிரியர்களின் கையில் இருப்பதால் தலைமைத்துவத்தின் கட்டளைக்கும் கட்டாயம் அடிப்பணிய வேண்டியுள்ளது.
பள்ளிக்கூடங்கள் மாணவர்களை இடைநிலைப்பள்ளி மட்டுமின்றி வாழ்க்கைக்கும் அவர்களை உருவாக்கும் மதிப்பிற்குரிய இடமாகதான் கருதப்படுகிறது.ஆனால்,இன்றை சூழலில் தமிழ்ப்பள்ளிகள் யு.பி.எஸ்.ஆர் தேர்விற்கான களமாக மட்டுமே கருதப்படுகிறது.எத்தனை “ஏ” கிடைத்தது என்பதில் காட்டும் ஆர்வத்தை அம்மாணவர்கள் தங்களை இடைநிலைப்பள்ளிக்கு நன் நிலையில் தயார்ப்படுத்திக் கொண்டார்களா என்பதில் துளியும் இல்லை.
தமிழ்ப்பள்ளியில் 7ஏ எடுத்த மாணவர்கள் கூட இடைநிலைப்பள்ளியில் தொலைந்துப்போன வரலாறு இருக்கின்றதை நாம் மறந்து விட முடியாது.இதற்கு முதன்மை காரணியம் அம்மாணவனை “ஏ”க்களுக்காக உருவாக்கினார்களே தவிர இடைநிலைப்பள்ளியின் சவாலையோ அல்லது சூழ்நிலையையோ சமாளிக்க கற்பிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.இந்த “ஏ”க்களை நோக்கி குதிரைகளை போல மாணவர்களை துரத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பள்ளியிலும் தலைமைத்துவத்தின் அதிகாரத்தில் ஆசிரியர்கள் தங்களின் இயல்பியல் தன்மையை இழந்து அன்பு,புன்னகை,உட்பட தங்களின் இயல்பியல் குணங்களை தொலைத்து விட்டு மாணவர்களிடம் குதிரை மீது ஏறி சவாரி செய்யும் “ஜோக்கிகளாய்” “ஏ”க்களை நோக்கி மாணவர்களை துரத்திக் கோண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில்,அன்மைய காலமாய் தமிழ்ப்பள்ளிகளை பற்றிக்கொண்ட விநோதமான நோய் பள்ளி விடுமுறைக்கால வகுப்புக்களாகும்.பள்ளி விடுமுறைதான் ஆசிரியர் தங்களின் குடும்பத்தோடும் பிள்ளைகளோடும் அதிகம் நெருக்கமாய் இருக்க முடியும்.அதிலும் குடும்பத்தை விட்டு வெகுதூரமாய் பணி செய்யும் ஆசிரியர்களுக்கோ இதுதான் தங்களின் குடும்ப கடமையை செய்யவும் தகுந்த காலம்.ஆனால்,அந்த விடுமுறையிலும் வகுப்புக்களை நடத்தி அந்த ஆசிரியர்களின் வாழ்வினை பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளி விடுகிறார்கள்.
யு.பி.எஸ்.ஆர் என்பது ஆறாண்டுக்கால கல்வியின் ஒரு மீள்பார்வைதான்,அஃது எந்தவொரு மாணவனின் எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் முடிவல்ல என்பதை ஒவ்வொரு தமிழ்ப்பள்ளி தலைமைத்துவமும் உணர வேண்டும்.ஒவ்வொரு நாளும் பள்ளி நேரத்தில் கற்பிக்க முடியாததையா பள்ளிக்கூடம் முடிந்தும் பள்ளி விடுமுறை காலத்திலும் கற்று தந்திட முடியும் எனும் அடிப்படை உண்மையை ஏன் தமிழ்ப்பள்ளி தலைமைத்துவங்கள் மறந்து விடுகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
பள்ளியின் பாடப்புத்தகத்தில் உள்ளதும்,ஆசிரியர்களால் கற்பிக்கப்படுவதும்தான் தேர்வில் கேள்வியாய் வரப்போகிறது.இந்நிலையில்,ஒவ்வொரு நாளும் பாட நேரத்தில் முறையாகவும் மாணவர்களுக்கு தெளிவாக புரியும் வண்ணமும் கற்பித்து விட்டால் எந்தவொரு தயக்கமும் கொள்ளத் தேவையில்லை.பாட நேரத்தில் முறையாக மாணவர்களுக்கு புரியும் நிலையில் கற்பிக்கப்படுகிறதா என தமிழ்ப்பள்ளிகளின் தலைமைத்துவம் கண்காணித்தாலே போதுமானது என்பதுதான் நிறைவானது.
அவ்வாறு கற்பிக்கப்பட்டு விட்டால் அப்பள்ளியின் அனைத்து மாணவர்களும் தனித்துவம் மிக்க சிறந்த மாணவர்களாய் திகழ்ந்து விடுவார்கள்.ஆனால்,இங்கு முறையாக செய்ய வேண்டியதை மறந்து விட்டு மாலை வகுப்பு,இரவு வகுப்பு,விடுமுறைக்கால வகுப்பு என தொடர்ந்துக்கொண்டிருப்பது எவ்வித நன்மையையும் ஏற்படுத்தாது.மாறாய்,ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தைதான் கொடுக்கும் என்பதை தலைமையாசிரியர்கள் உணர வேண்டும்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான சூழலையும் சுதந்திரமான செயல்பாட்டுக்கும் வழிக்கொடுத்தால் ஆசிரியர்கள் தங்களின் கடமையினை இன்னும் ஆக்கப்பூர்வமாய் செய்வதற்கு அஃது பெரிதும் உதவிடும் என்பது மரபு.ஒவ்வொரு நாளும் மன அழுத்தத்துடனும் வெறுப்புடனும் பள்ளிக்கூடத்தில் நுழையும் ஆசிரியர்களால் எப்படி நன் நிலையில் மாணவர்களுக்கு போதிக்க முடியும் என்பதை தலைமையாசிரியர்கள் உணர வேண்டாமா?
நம் நாட்டின் கல்வி திட்டங்கள் விவேகமானதாய் இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.இருப்பினும்,மாநில ரீதியாகவோ அல்லது மாவட்ட ரீதியாகவோ மாலை வகுப்பு,இரவு வகுப்பு அல்லது விடுமுறைக்கால வகுப்புக்களை நடத்துங்கள் என எந்தவொரு கட்டளையுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மலாய் மற்றும் சீனப்பள்ளிகளில் இந்நிலை மொத்தமாய் இல்லை என சொல்லிட முடியாது.ஆனால்,தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்களை மன நோயாளிகளாய் மாற்றும் அளவிற்கு இருப்பதுதான் வேதனையானது.
இவ்வாண்டுக்கான பள்ளி விடுமுறை தொடங்கி விட்ட நிலையில் இன்னமும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் எத்தனை ஆசிரியர்கள் இன்னமும் பள்ளிக்கூடங்களின் வாசத்தை வேதனையோடு நுகர்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் உணரத்தான் முடிகிறது.அதுமட்டுமின்றி,அவர்களின் சோகமும் வெறுமையும் நிறைந்த முகங்களை காண்கையில் அவர்கள் மீது பரிதாபம்தான் வருகிறது.இம்மாதிரியா சூழலில் அவர்களா எப்படி மாணவர்களுக்கு நிறைவாய் கற்பிக்க முடியும்?
விடுமுறைக்கால வகுப்புக்களுக்கு கல்வி அமைச்சு அனுமதிக்கொடுக்க கூடாது.பள்ளி நேரத்தில் முறையாக கற்பிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய தூரநோக்கு சிந்தனையோடு ஆக்கப்பூர்வ திட்டங்களை வரையறுக்க வேண்டும் என்பதுதான் இன்றைய சூழலில் ஆசிரியர்களின் பெரும் எதிர்பார்ப்பு என்றால் அஃது மறுப்பதற்கில்லை.ஆசிரியர்கள் பள்ளியின் தலைமைத்துவத்திடம் சிக்கித் தவிக்கும் வேதனை ஒரு புறமிருக்க பெற்றோர்களோ தங்களின் பிள்ளைகள் “ஏ”எடுக்க வேண்டும் என ஆசிரியர்களை வாட்டி எடுத்து விடுகிறார்கள்.பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் ஒருவகையில் ஆசிரியர்களை தலைமையாசிரியர்கள் கசக்கி எடுக்க ஒரு காரணியமாவதும் குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் வாழ்க்கை அவர்கள் எடுக்கும் “ஏ”க்களில் இல்லை என்பதை தலைமையாசிரியர்களும் பெற்றோர்களும் மட்டுமின்றி நம் சமுதாயமும் உணர வேண்டும்.அப்போதுதான் நன் நிலையில் சிறந்த மாணவர் சமூக தமிழ்ப்பள்ளிகளில் உயிர்ப்பிக்க முடியும் என்பது எதார்த்த உண்மை.தலைமையாசிரியர்களே தங்களின் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான சூழலையும் சுதந்திரமாய் செயல்படும் சூழலையும் கொடுத்துப்பாருங்கள் தங்களின் பள்ளியில் ஒவ்வொரு மாணவனும் சிறந்த மாணவனாய் உருவாகும் நிலை ஏற்படும்.
ஏ”க்களை நோக்கி குதிரை பந்தையம் போல ஓடாமல் மாணவர்களை நன் நிலைக்கு உருவாக்கும் இலக்கை உன்னதமாய் கடைபிடியுங்கள் எல்லாம் மாணவர்களும் சிறந்த மாணவர்களாய் உருவாவதோடு மட்டுமின்றி இடைநிலைப்பள்ளியிலும் தத்தம் சார்ந்த தமிழ்ப்பள்ளிகளின் நற்பெயரை உயர்த்தி பிடிப்பார்கள்.இது கற்பனையல்ல.நிஜம்.
ஒவ்வொரு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மன அழுத்தம் தொடர்பிலான பரிசோதனையை மேற்கொண்டால் நிச்சயம் பத்தில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.அன்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழ்ப்பள்ளி மாணவர்களில் பத்தில் நால்வர் மன அழுத்ததிற்கு ஆளாகியிருக்கும் நிலையில் ஆசிரியர்களின் நிலை நிச்சயம் அதைவிட மோசமாகத்தான் இருக்கும் என்பதை மறுத்திட முடியுமா?
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த அடைவு நிலையை எட்ட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புதான்.ஆனால்,இங்கு,அதற்கான உண்மையான தேடலையும் வழிமுறையையும் தொலைத்து விட்டு கட்டாயத்தின் அடிப்படையிலும் அதிகாரத்துவ கட்டளையிலும் அதனை நிறைவேற்ற துடிப்பது கையில் எழுதுகோளை கொடுத்துவிட்டு விரல்களை வெட்டி வீசுவதற்கு ஈடானது.தலைமையாசிரியர்களே,சற்று விவேகமாய் சிந்தித்துப் பாருங்கள் தங்களின் கீழ் பணி புரியும் ஆசிரியர்கள் சந்தோசமான சூழலில் தங்களின் பணியின் செய்கிறார்களா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
ஒருவரின் உணர்வையும்,இயல்பியல் தன்மையையும்,சுதந்திரத்தையும் பறித்து விட்டு அவர்களிடம் உங்களின் தேவைகளையும் எதிர்பார்ப்பினையும் திணிப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை.இது உலக கொடுங்கோள் ஆட்சிக்கு நிகரானது.சில பள்ளிகளில் தலைமையாசிரியர் ஹிட்லராகதான் இருக்கிறார்கள்.இதை சொல்வதால் நாங்கள் தமிழ்ப்பள்ளிக்கோ அல்லது தலைமையாசிரியர்களுக்கோ எதிரிகளல்ல.எங்களும் சமூக பொறுப்பு இருப்பதால்தான் அறிவார்ந்த சமூகத்தின் சிற்பிகளான அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் மன நோயாளிகளாய் உருமாறி விடக்கூடாது என்பதற்காகவே இதனை மன வேதனையோடு பதிவு செய்கிறோம்.
மாற்றங்கள் மற்றவர்களிடமிருந்து தொடங்குவதை காட்டிலும் முதலில் நம்மிடமிருந்து தொடங்கட்டும்.தலைமையாசிரியர்களிடம் மாற்றம் மெய்ப்பித்தால் தனித்துவமான ஆசிரியர்கள் உயிர்ப்பிப்பார்கள்.தனித்துவமான ஆசிரியர்கள் உயிர்ப்பித்தால் நம்பிக்கையான அறிவார்ந்த நாளைய மாணவர் உலகம் உதயமாகும் என்பது மறுத்திட முடியாத உண்மை.

ஜனநாயக செயல் கட்சியில் இனவாதம் மட்டுமே மேலோங்கியுள்ளது - ஜனநாயகம் கேள்விக்குறியாய் இருக்கிறது.
மலேசிய அரசியலில் அம்னோ தேசிய முன்னணிக்கு பெரும் சவால் மிக்க அரசியல் கட்சியாய் உருவெடுத்திருக்கும் ஜசெக எனப்படும் ஜனநாயக செயல் கட்சியில் ஜனநாயகம் எனும் சொல் மரணித்து போய் விட்டு இனவாதம் மட்டுமே அங்கே தலைத்தூக்கிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.அம்னோவை போலவே ஜசெகவும் இனவாதத்தின் உச்சமாகவே விளங்குகிறது என்றும் அக்கட்சியின் அடித்தட்டு உறுப்பினர்கள் முதற்கொண்டு அதன் ஆதரவாளர்கள் மத்தியிலும் அஃது நீண்டக்கால உறுத்தலாகவே இருந்து வருகிறது.
ஜசெக கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அக்கட்சியில் இந்தியர்கள் என்பவர்கள் ஒரு கருவேப்பிலை போல் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதுதான் உண்மை.ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றங்களுக்கு அக்கட்சியின் சார்பில் ஒதுக்கப்படும் தொகுதிகள் கூட இனவாத தன்மையோடும் கோட்டா முறையிலும் தான் உள்ளது.
பல்லினம் சார்ந்த கட்சி என கூறப்பட்டாலும் இங்கு ஒரு இனத்தின் ஆதிக்கம் மட்டுமே மேலோங்கியுள்ளது.ம இ கா தேசிய முன்னணியில் அம்னோவின் அடிமையாய் இருப்பதாக சாடும் ஜசெக இந்திய அரசியல்வாதிகள் சொந்த கட்சியில் உரிமையை இழந்து ஒரு இனத்தின் ஆளுமையில் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பதை அவர்கள் மறந்து விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
மக்களுக்கு நன் சேவையும் அர்ப்பணிப்பும் செய்துக் கொண்டிருக்கும் தலைவர்களுக்கு அக்கட்சியில் மதிப்பும் மரியாதையும் இல்லை.மாறாய்,தலைமைத்துவத்திற்கு வால் பிடித்து கூஜா தூக்கும் அரசியல் பிழைப்புவாதிகளுக்கு மட்டுமே அக்கட்சியில் தொடர்ந்து வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
பல்லினம் கட்சி என மார்த்தாட்டிக் கொள்ளும் ஜசெகவில் எந்தவொரு மாநிலத்திலும் இந்தியர் ஒருவர் தலைவராக இதுவரை நியமிக்கப்பட வில்லை என்பது வேதனையான பதிவாக இருக்கும் பட்சத்தில் மாநில ரீதியிலான கட்சி தேர்தலில் முதன்மை நிலையில் இந்திய தலைவர்கள் வெற்றியை பதிவு செய்தாலும் அவர்களுக்கு துணைத்தலைவர்,உதவித் தலைவர் அல்லது துணை செயலாளர் போன்ற பதவிகளோடு இதர பதவிகள் மட்டுமே வழங்கப்படுகிறதே தவிர தலைவர் எனும் பதவி மட்டும் அவர்களுக்கு தொடர்ந்து அந்நியமாகியே வருகிறது.
ஜசெக கட்சியில் மாநில தலைவர்கள் பதவியெல்லாம் குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு போலவும் இந்தியர்களுக்கு அஃது எட்டாக் கனி போலவும்தான் உள்ளது.இந்தியர்களின் உரிமையை அம்னோவிடம் ம இ கா அடமானம் வைத்து விட்டது என பத்திரிக்கை அறிக்கை விடும் ஜசெக விளம்பர பிரியர் அரசியல்வாதிகள் கட்சிக்குள் ஒரு இனத்திடம் வாய் திறந்து உரிமைக்காக போராட முடியாமல் மண்டியிட்டுக் கிடப்பது பெரும் அவமானத்திற்குரியது.ம இ காவை வசைப்பாடும் ஜசெக இந்திய தலைவர்கள் நாற்காலிக்காகவும் பதவிக்காகவும் கட்சிக்குள் அடிமையாய் தான் இருக்கிறார்கள்.
அம்னோ தேசிய முன்னணியை இனவாதத்தோடு ஒப்பிடும் இவர்கள் சொந்தக்கட்சிகுள் இனவாதத்திற்கு அடிமைப்பட்டு கிடப்பது அவர்கள் இதுநாள் வரை ம இ காவிற்கு எதிராகவும் அம்னோவிற்கு எதிராகவும் முழங்கியதெல்லாம் வெறும் அரசியல் சுயநலம் மட்டுமே என சந்தேகிக்க செய்கிறது.
நாட்டின் 13வது பொது தேர்தலில் ஜசெகவில் ஒருவருக்கு ஒரு தொகுதி மட்டுமே என அன்றைய தலைவர் அமரர் கர்பால் சிங் அறிவித்த போது பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி தனது நாடாளுமன்றத்தை காலி செய்து விட்டு வெறும் சட்டமன்றத்தில் மட்டுமே போட்டியிட்டார்.ஆனால்,பேராக் மாநிலத்தில் கர்பால் சிங்கின் கட்டளைக்கு பணியால் அன்றைய மாநில ஜசெக தலைவர் ங் கூ ஹாம் மற்றும் மாநில செயலாளர் ங கோர் மிங் ஆகிய இருவரும் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் போட்டியிட்டனர்.அஃது அவர்களின் ஆளுமையா அல்லது இனவாத திமிரா என்பதை அக்கட்சியின் தலைமைத்துவம் விளக்குமா?
ஒவ்வொரு மாநிலத்திலும் கணிசமான இந்தியர்கள் ஜசெகவில் உறுப்பினர்களால் இருக்கும் நிலையிலும் பல்லின கட்சி என முழங்கும் ஜசெகவில் சம நிகராய் இந்தியர்களுக்கும் தொகுதி ஒதுக்காதது ஏன் எனும் கேள்விக்கு அதன் தலைமைத்துவமோ அல்லது அக்கட்சியில் நாற்காலி கிடைத்தால் மட்டும் போதும் என வாய் முடிக்கொண்டு அடிமையா கிடக்கும் இந்திய அரசியல்வாதிகளும் விளக்கம் அளிப்பார்களா?பல்லினம் என சொல்லும் போதே அங்கு கோட்டா முறைக்கும் கட்சியின் உறுப்பினர் அடிப்படையிலும் தொகுதி ஒதுக்கப்படுவது என்பது முறையற்று போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜசெக கட்சி ஒரு இந்தியரால் தொடங்கப்பட்டிருந்தாலும் அக்கட்சி இன்றைய சூழலில் இந்திய சமுதாயத்திற்கு அந்நியமாகி தான் வருகிறது.ஒரு இனத்தின் ஆளுமையும் இனவாத போக்கும் அக்கட்சியில் இந்தியர்களின் உரிமைக்கு தொடர்ந்து சாவு மணி அடித்துக் கொண்டிருக்கிறது.இந்திய சமுதாயத்திற்காக போராடுகிறோம் என நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அக்கட்சியின் சார்பில் வெற்று முழக்கம் செய்துக் கொண்டிருப்பவர்கள் கட்சிக்குள் அரசியல் அடிமைகளாய் நாற்காலி மயக்கத்தில் உள்ளனர்.
பத்திரிக்கைகளில் இந்திய சமுதாயத்தின் உரிமை குறித்து அறிக்கை விடுவதோடு நமக்கான உரிமை பறிக்கப்படுவதாகவும் அதற்கு ம இ கா அம்னோவிற்கு வால் பிடிப்பதாகவும் கூறும் ஜசெக இந்திய தலைவர் சொந்தக் கட்சியில் வாய் திறக்க முடியாமல் குறிப்பிட்ட ஓர் இனத்திற்கு அடிமைப் போக்குடன் வால் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
நாடு தழுவிய நிலையில் ஜசெகவில் இந்திய உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கெல்லாம் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு குறிப்பிட்ட ஒரு இனத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் அதிகமான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதை கடந்த இரு பொது தேர்தல்களில் வெளிப்படையாகவே உணர முடிந்தது.
குறிப்பாக சிலாங்கூரில் கோத்தா அலாம் ஷா சட்டமன்றத்தில் 12வது பொது தேர்தலில் வெற்றி பெற்ற மனோகரன் மலையாளத்திற்கு மாற்றாக கணபதி ராவிற்கு அத்தொகுதி வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மனோகரனை அத்தொகுதியில் நிலைநிறுத்தி விட்டு கண்பதி ராவிற்கு வேறு தொகுதி வழங்கியிருக்கலாம்.அவ்வாறு செய்யாமல் ஒருவரின் வாய்ப்பை பறித்து மற்றொருவருக்கு கொடுப்பது வேடிக்கையானதுதானே.
அதுபோலவே,12வது பொது தேர்தலில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனோகரனுக்கு ஆப்பு வைத்து விட்டு அவருக்கு பதிலாய் அத்தொகுதியில் பாசீர் பெடாமர் சட்டமன்ற உறுப்பினரை 13வது பொது தேர்தலில் போட்டியிட வைத்தனர்.அதன் பின்னர் இரவு முழுவது கட்சியின் தலைமையகத்தில் கெஞ்சி கூத்தாடி சிம்மாதிரியின் வாய்ப்பை பறித்து கேமரன் மலையில் மனோகரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை மறுக்கத்தான் முடியுமா?
அதுமட்டுமா? பேராக் மாநிலத்தில் தகுதிகள் இருந்தும் வாய்ப்பு வழங்கப்படாமல் சுங்கை சிப்புட் ஹலான்,பவானி (ஷாஷா),டாக்டர் ஜெயபாலன்,ஜோகூர் மாநிலத்தில் சந்திரசேகரன் என புறக்கணிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுக்கொண்டுதான் இருக்கிறது.நாட்டின் 14வது பொது தேர்தலிலும் அதே பழைய முகங்கள் மட்டுமே இருக்கும்.இந்திய சமுதாயத்திடமிருந்து புதிய முகத்திற்கு இனவாத ஜசெகவில் இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
அதேவேளையில்,நடப்பில் கட்சியில் முதன்மை தலைவர்கள் என முத்திரை குத்தப்பட்டிருக்கும் இந்திய தலைவர்கள் கூட தங்களின் வேண்டியவர்களுக்கும் சாதி பின்னணிக்கும் மட்டுமே சிபாரிசு செய்வார்களே தவிர உண்மையான சேவையாளனுக்கும் தகுதியானவனுக்கும் மறந்தும் வாய்ப்பு கேட்டிட மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
இந்திய சமுதாயத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பது போல அறிக்கை விடுவதெல்லாம் வெறும் அரசியல் நாடகம் தான்.உண்மையில் ஜசெக இந்திய அரசியல்வாதிகள் கட்சியில் ஆளுமை கொண்டிருக்கும்ஒரு இனத்திடம் அடிமைப்பட்டுதான் கிடக்கிறார்கள்.ஜனநாயக செயல் கட்சியில் ஜனநாயகம் என்பது துளியும் இல்லாமல்,வெறும் இனவாதம் மட்டுமே மேலோங்கியுள்ளது என்பதுதான் இயல்பியல் உண்மை.
கட்சிக்குள் இந்திய சமுதாயத்தை இனவாத போக்குடன் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஜசெக பல்லினம் கட்சி என்று கூறுவதும் இந்திய சமுதாயத்திற்காக போராடுகிறோம் என மார்த்தட்டுவதெல்லாம் வெறும் "ஓட்டு"க்காக மட்டுமே என்பது மறுத்திட முடியாத உண்மை.இனவாத உச்சத்தோடு ஜனநாயக செயல் கட்சி அதன் அரசியல் முன் நகர்வினை காலகாலமாய் முன்னெடுத்து வரும் வேளையில் இந்திய சமுதாயமும் அதனை நம்பி தொடர்ந்து ஏமாந்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்திய சமுதாயத்தின் உரிமைக்காக போராடுகிறோம் என முழங்கும் ஜசெக இந்திய தலைவர்கள் முதலில் கட்சிக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.இல்லையேல்,உரிமைக்கு போராடுகிறோம் என போலி முழக்கம் இடுவதை நிறுத்துங்கள்.நாற்காலி சுகத்திற்காக கட்சியில் அடிமைப்பட்டு கிடக்கும் உங்களால் இந்திய சமுதாயம் உரிமை பெறும் என்பதெல்லாம் வெறும் பகல் கனவு.
தேசிய முன்னணியில் அம்னோவிடம் ம இ காவை எவ்வாறு ஜசெக இந்திய தலைவர்கள் விவரிக்கிறார்களோ அதுபோலவே ஜசெகவில் இந்திய தலைவர்களும் அக்கட்சியில் அடிமைப்பட்டு நம்மினத்தின் உரிமையை விற்றும் அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத நிதர்சனம்.இவர்களின் அரசியல் நாடகத்தில் மக்களை கோமாளியாக்கி விடுகிறார்கள்.
"ஜனநாயக் செயல் கட்சி" ஜனநாயகம் இழந்து இனவாத செயல் கட்சியாய் தான் தனது அரசியல் பிழைப்பினை மேற்கொண்டு வருகிறது.அம்னோ தேசிய முன்னணியில் கோரும் அதே உரிமையை கட்சியிலும் இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என அக்கட்சியின் இந்திய உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தற்போது விழிப்புணர்வோடு கோரிக்கை விட தொடங்கி விட்டனர்.


நாட்டின் 14வது பொது தேர்தலில் கடந்தக்காலங்களை காட்டிலும் இம்முறை அதிகமான இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை தற்போது அக்கட்சியினர் மத்தியில் ஆழமாய் உயிர்ப்பிக்க தொடங்கி விட்டது.தேசிய முன்னணியை எதிர்த்து உரிமைக்காக போராடுவதற்கு முன்னர் நாம் ஜனநாயக உரிமையோடு இந்திய சமுதாயத்திற்கு மதிப்பளிக்கும் கட்சியிலிருந்து நமது போராட்டத்தை தொடங்க வேண்டும் எனும் உயரிய சிந்தனை ஜசெக இந்தியர்கள் மத்தியில் மேலோங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, 9 April 2017

மீசை வெறும் மயிர்தான்...

                          
முகத்தில் சின்னதாய் 
அரும்பு மீசை
நான் ஆம்பள என்று
நினைவுறுத்தியது....

மீசை முளைத்த
எனக்கும்
மீசையோடு இருக்கும்
அப்பாவிற்கும்
இடைவெளி உண்டானது....

மீசை முளைத்த நான்
மீசை இல்லாத அம்மாவுக்கு அந்நியமானேன்
இடைவெளியை நானே உருவாக்கிக் கொண்டேன்....

மீசை இல்லாத அம்மாவை
எனது அதிகார குரல்
ஆளுமை செய்தது
அப்பாவின் பாணியில்....

அக்காவும் தங்கையும் கூட
என்னிடம் பணிந்துதான் போகனும்
அவர்கள் முகத்தில் மீசை இல்லாததால்....

காதலிக்கூட என் மீசைக்கு 
அடங்கித் தான் போகனும்
ஆணின் ஆளுமைக்கும்
ஆதிக்கத்துற்கும்
மீசைதானே சான்றிதழ்....

பெண்கள் என்னிடம் அடங்கிதான் போகனும்
மீசை முளைத்த என்னிடம்
அடிமைப்பட்டுதானே இருக்கனும்....

மீசை முளைத்த என்னிடம்
ஆம்பள திமிரும் துளிர்விட்டது....

ஆம்பளையான என்னிடம்
ஆணாத்திக்கமும் திமிரும்
ஆட்கொண்டது பெருமிதமாய்....

பெண்மையை அடிமை செய்யும் "மீசை" வீரத்தின் அடையாளமில்லை
ஹோர்மனின் மாற்றம்.....

அட போங்கடா...
பெண்ணியம் அடிமைப்படுத்தும் "மீசை"ஆளுமைக்கு உரிதானதால்ல
அஃது
ஆணவத்தின் சின்னமும் இல்லை....

மீசை என்பது வெறும்
மயிர்தான்!!!

Friday, 7 April 2017

பெண்ணாய் இரு

பெண்ணே
நீ பெண்ணாய் இரு

நீ நீயாகவே இரு
உன் தனித்தன்மை இழக்காதே

உன் உரிமையும் உணர்வும்
உனக்கானது
பிறர் அதை நிர்ணயம் செய்ய
இடம் அளிக்காதே

பூவும் பொட்டும்
உடையும் நடையும்
உனக்கானது
கூந்தலை குறைப்பது
சேலை தவிர்ப்பது
விதிமீறலல்ல
அடங்க மறு
அன்புக் கொள்
அடிமையில்லை என்றுணர்த்து

ஆளுமை கொள்
ஆங்காரம் தவிர்
உடமையிலும்  உளமையிலும்
உன்னிலையை கொள்

இங்கு எதுவும் அடிமையில்லை என்றுணர்த்து
சமைப்பது   துவைப்பது
ஈன்றெடுப்பது
இயல்பு - ஆனால் அஃது கட்டாயமுமில்லை

பெண்கள் இயந்திரமுமில்லை
பூனைக்கு எலி
அடிமையில்லை
சமஸ்கிரதத்திற்கும் தமிழும்
அடிமையில்லை

உறவுகளில் யாரும் யாருக்கும் அடிமையில்லை
உணர்வுகளும் கருத்துக்களும் அடிமையில்லை
பெண்ணும் ஆணுக்கு அடிமையில்லை
அனைத்து சமம் என சண்டைக் கொள்

அதிகாரத்திற்கு அடங்காதே
ஆண் வர்க்கத்தித்கு நிகரென்று
உறுதி கொள்!!!!

அழகிய ஓவியம்

                           
                       அழகிய ஓவியம்

என் குரல்
நசுக்கப்படுகிறது
என் சுதந்திரம்
ஒடுக்கப்படுகிறது
எனக்கான உரிமை
யாரோ ஒருவன் நிர்ணயம்
செய்கிறான்....

என் தலை முதல்
பாதம் வரை
இரசிக்கப்படுகிறது
அவனின் காமப்பார்வை
என் மீது விழுகிறது
என் அழகிய இதயம் மட்டும்
அவனுக்கு தென்படவில்லை...

சமையல் செய்யும் வேலைக்காரி
படுக்கைக்கு அழகிய பதுமை
குழந்தை பெறும் இயந்திரம்
அவனது பார்வையில்
இதுமட்டுமே நான்....

சுதந்திரமாய் பறக்க நினைக்கிறேன்
சிறகு உடைக்கப்பட்டு விட்டது
என் கனவுகூட இங்கு
அவனின் அனுமதியின்றி இல்லை.....

என் சிரிப்பு
என் புன்னகை
என் உரிமை
என் சுதந்திரம்
என் சிந்தனை
எல்லாமே அவனே நிர்ணயம் செய்கிறான்....

ஆணாதிக்கத்தின் திமிரில்
அவன்
பெண்ணிய எதிர்பார்ப்புடன் நான்
என் சுதந்திரத்தை பறிக்க அவன் யார்?
என் உரிமையை நிர்ணயம் செய்ய
அவனுக்கு உரிமைக்கொடுத்தது யார்?
புதியதொரு விடியல்
புதியதொரு சிந்தனை
எனக்கான உரிமை எனக்கான சுதந்திரம்
அதை நானே நிர்ணயம் செய்துக் கொள்கிறேன்....

எனக்கான உலகில் என் சிறகு விரியும்
என் சிந்தனை போல
தடை போட்டால் சிதைத்து விடுவேன் வீறுக்கொண்டு
அடிமை மடமை ஒழிப்பேன்
அகிலம் எனதென்பேன்...

பெண்ணியம் அடிமையல்ல
புரட்சியும் சுதந்திரமும் ஒருங்கிணைந்த 
அழகிய ஓவியம்!!

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!!

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!! மலேசியாவில் வாழ்ந்த வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்திர இடத்தை தங்களின் தனி...