Thursday, 5 March 2020

அதிகரித்து வரும் உணவு விரயம் – அக்கறையில்லாத மலேசியர்கள் மலேசியாவில் நாள் ஒன்றுக்கு 15000 டன் உணவு விரயம்!!


அதிகரித்து வரும் உணவு விரயம் – அக்கறையில்லாத மலேசியர்கள்
   மலேசியாவில் நாள் ஒன்றுக்கு 15000 டன் உணவு விரயம்!!

     மலேசியர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் உணவு விரயம் பழக்கம் பெரும் கவலையை உருவாக்கும் நிலையை எட்டியுள்ளது எனலாம்.தொடர்ந்து அதிகரித்து வரும் இப்பழக்கமானது நிஜத்தில் மலேசியாவில் அபாயக் கட்டத்தை நெருங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
   நாட்டில் தூக்கியெறியப்படும் திடக்கழிவுகளில் 55விழுகாடு உணவு கழிவுகள் என்பது பெரும் அதிர்சியானது.மேலும்,நாள் ஒன்றுக்கு நாட்டில் விரயம் செய்யப்படும் உணவு கழிவின் அளவு 15000 டன் என்பது பெரும் கவலைக்குரியது.இதில் சுமார் 3000 மெட்ரிக் டன் உணவுகள் மனிதர்களின் கைப்படாத மிகவும் சுத்தமான உணவுகளாகும். மேலும்,8,000 டன் உணவு விரயத்தை தவிக்ககூடிய சாத்தியத்தையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.இது சுமார் பசியோடு வாடும் 11 மில்லியன் பேருக்கு மூன்று வேளைகு உகர்ந்த உணவு என்பது குறிப்பிடத்தக்கது.
    உணவு விரயம் குறித்த விழிப்புணர்வும் கவலையும் மலேசியர்களிடையே இன்னமும் உயிர்த்தெழவில்லை என்பதுதான் நிஜம்.இது குறித்த ஆக்கப்பூர்வமான திட்டங்களும் செயல்பாடுகளும் அரசாங்கத்தாலும் அல்லது பொது அமைப்புகள் மற்றும் தன்னார்வ குழுக்களாலும் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்படவுமில்லை.ஆனால்,இவ்விவகாரத்தில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தொடர்ந்து அதன் பங்களிப்பினை செம்மையாக மேற்கொண்டு வருவதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.
    உணவு விரயம் குறித்து புள்ளி விவரங்களோடு அச்சங்கம் எடுத்துரைத்தாலும் அஃது மலேசியர்களின் காதுகளில் ஒலிக்கவில்லை என்பதை விட அவர்கள் இவ்விடயத்தில் அலட்சியமும் அக்கறையின்மையையும் வெளிப்படையாக காட்டுவதை உணரவே முடிகிறது.
  நாட்டில் விழா காலங்களில் விரயம் செய்யப்படும் உணவுகளின் அளவு இயல்பு நாட்களை காட்டிலும் பன்மடங்கு அதிகம்.விரயம் செய்யப்படும் ஒவ்வொரு உணவு யாரோ ஒருவரின் பசியை போக்கும் உணவு என்பதை நாம் மறந்து விடக்கூடாது.உணவு விரயம் செய்வது கொடுரமான ஒன்றாக கருதப்பட வேண்டும்.
   உலகில் ஒருவேளை உணவுக்கூட இல்லாமல் மக்கள் மண்ணை சுட்டு சாப்பிடும் நிலையிலும் அசுத்தமான நீரை அள்ளி பருகியும் உயிர் வாழ்ந்து வரும் பரிதாப நிலையில் நாம் உண்டு கொழுத்து மகிழ்வதோடு உணவை விரயம் செய்தும் பெரும் அநாகரியகமாக நடந்துக் கொள்கிறோம்.உணவின்றி உலகில் மடிந்து போகும் மனிதர்களின் எண்ணிக்கை 920 மில்லியன் என ஐயக்கிய நாட்டு உணவு நிறுவனத்தின் புள்ளி விவரம் காட்டுகிறது.
    மலேசியாவில்  வீடுகளிலும் உணவகங்களிலும் வீசப்படும் உணவு கழிவுகள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது.நான் பணம் போட்டு வாங்கும் உணவை சாப்பிடுவேன் அல்லடு தூக்கியெறிவேன் எனும் போக்கு மலேசியர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.நீ உண்ணும் உணவு மட்டுமே உன்னுடையது.மீதம் உள்ளவை மற்றவர்களது என்பதை நம்மவர்களிடையே கட்டாயமாக திணிக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.
   அன்மையில்,நடந்து முடிந்த தைபூசத்தின் போது அன்னதானம் எனும் பெயரில் அதிகமான உணவு விரயமாவதை நாம் உணர்ந்திடாமல் போவது மிகவும் வருத்தமான விடயம்.முன்பெல்லாம் ஆலயங்களில் மட்டும்தான் அன்னதானம் வழங்கப்படும்.ஆனால்,நடப்பில் அரசியல் கட்சிகள்,பொது இயக்கங்கள்,அமைப்புகள் என அனைத்து தரப்பும் அன்னதானம் வழங்குவதில் முனைப்புக் காட்டுகின்றன.
   அவ்வாறு ஆங்காங்கே அன்னதானம் கிடைக்கும் நிலையில் தைபூசத்திற்கு வரும் மக்கள் தேவைக்கு அதிகமான உணவை எடுத்துக் கொள்வதும்,பாதி உணவை சாப்பிட்டு விட்டு மீதத்தை வீசுவதும் வழக்கமாகிவிட்டது.தேவைக்கு அதிகமாக எடுத்த உணவையும் கண்ட இடங்களில் வைத்து விட்டும் வீசிவிட்டும் போகும்  செயல்களும் துளியும் குற்ற உணர்வில்லாமல் தொடர்கிறது.
    உணவிற்காக மூன்றாம் உலகப் போர் கூட நிகழ சாத்தியம் இருக்கு என  அஞ்சிடும் நிலையில் உணவு விரயம் என்பது  உலக மக்களிடையே அலட்சியமான ஒன்றாக திகழ்ந்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.உலகில் சுமார் 870 கோடி மக்கள் உணவிற்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கை தினமும் விரயம் செய்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய கொடுரம் என்பதை நாம் உணர வேண்டாமா?
   வருடத்திற்கு விரயம் செய்யப்படும் உணவின் அளவு சுமார் 1.3 பில்லியன் டன் என புள்ளி விவரம் கூறும் அதேவேளையில் இதனால் பொருளாதார இழப்புகளோடு நாம் அதிகம் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களும் அழிவை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.மேலும் 3.3 பில்லியன் 'டன்' கரியமில வாயு உணவு விரயத்தால் உலகத்தின் வாயு மண்டலத்தில் சேர்க்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
    உணவு விரயத்தால்  தூக்கியெறியப்படும் உணவு கழிவுகள் மூலம் பூமியில் உருவாகும் நச்சு வாயு மூலம் இயற்கை பெரும் பாதிப்படைவதோடு நிலமும் அதன் இயற்கை தன்மையை இழந்து விடுகிறது.அவ்வாறு நிலம் அதன் தன்மையை தொலைக்கும் நிலையில் நிலம் வறண்டு பாலைவனமாய் உருவெடுக்கிறது.இந்நிலையால் விவசாயத் துறை பெரும் பாதிப்பினை எதிர்நோக்குகிறது.உணவு உற்பத்தி என்பது பெரும் பின்னடைவை எதிர்நோக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    நடப்பில், உலகின் உணவு உற்பத்தி என்பது தொடர்ந்து சரிந்துக் கொண்டுதான் இருக்கிறது.வரும் 2050இல் உணவு உற்பத்தியை 60 விழுகாட்டிற்கு நிகராய்  அதிகரிக்க முடியாமல் போனால் உலகம் உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் எனும் அச்சுறுத்தலை ஐயக்கிய நாடுகள் சபை நினைவுறுத்தியுள்ளது.மலேசியாவை பொருத்தமட்டில் விவசாய நிலங்கள் மேம்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதால் குறிப்பாக உணவு உற்பத்தி சார்ந்த விவசாயம் என்பது தொடர்ந்து சரிந்து வருகிறது.
    இந்நிலை தொடருமானால்,வரும் 2050இல் உணவு தட்டுப்பாடு நாடுகளில் மலேசியாவும் இடம் பிடிக்கும் சாத்தியத்தை கொண்டிருப்பதை மறுத்திடலாகாது.நாம் விவேகமான செயல்பாட்டை முன்னெடுக்க தவறினால் உணவு விரயத்தால் ஏற்பட போகும் அழிவை சந்திக்க நேரிடும் என்பது மட்டும் உறுதி.
   மலேசியாவில் உணவு  விரயம் என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.மேலும்,நாம் உணவை விரயம் செய்கிறோம் எனும் குற்ற உணர்வு மலேசியர்களுக்கு துளியும் இல்லை என்றால்,அஃது மறுப்பதற்கில்லை.உணவகங்கள்,தத்தம் வீடுகள் மட்டுமின்றி திருவிழா,பண்டிகைகள்,திருமணம் போன்ற பெருவிழாக்களின் போதும் உணவு விரயம் என்பது வழக்கத்திற்கும் மாறாக பன்மடங்கு  அதிகரித்து போவது குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
    இதற்கிடையில்,அவ்வப்போடு நாட்டில் கொண்டாடப்படும் உணவு சந்தை (FOOD FAIR) நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்.இம்மாதிரியான உணவு சந்தை நிகழ்வுகளில் உணவுகள் கேளிக்கை பொருள் போல் சித்தரிக்கப்பட்டு பெரும் அளவில் விரயம் செய்யப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16இல் அனுசரிக்கப்படும் உலக உணவு தினம் கூட ஏதோ கண்காட்சி போலதான் கொண்டாடப்படுகிறது.
    உண்மையில்,விழிப்புணர்வு நாளாகவும் உணவு விரயத்தை கட்டுப்படுத்தும் சிந்தனையோடும் இந்நாளை முன்னெடுக்க வேண்டியதை மலேசியா உட்பட பலநாடுகள் தவறிவிட்டது என்பதுதான் உண்மை.பசிக்காக உணவு உண்ணும் வழக்கம் மாறி தற்போது பொழுதுப்போக்கிற்காக உணவு உண்ணும் நிலை உருவெடுத்து விட்டது.
    கடந்தக்காலங்களில் இவ்விவகாரத்தில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வந்த பல உலக நாடுகள் நடப்பில் உணவு விரயத்தால் ஏற்படப்போகும் விளைவுகளை கருத்தில் கொண்டு உணவு விரயத்திற்கு எதிராக ஆக்கப்பூர்வமாக களமிறங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.அதன் மூலம் சம்மதப்பட்ட நாடுகளில் உணவு விரயத்தை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையும் நம்மால் உணர முடிகிறது.
   இந்த உணவு விரயத்தை தடுக்கும் முயற்சியிலும் அதனை சரியான இலக்கிற்கு கொண்டு செல்லும் வழி தடத்திலும் துர்க்கி,பிரான்சிஸ்,டென்மார்க் ஆகிய நாடுகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வரும் வேளையில்,ஜப்பான்,பிரிட்டிஸ்,சிங்கப்பூர் உட்பட பலநாடுகளும் தற்போது இதில் களமிறங்கியுள்ளன.
   இவ்விடயத்தில் ஜெர்மன் தனித்துவமாய் விளங்குவதாக தெரிய வந்துள்ளது.அந்நாட்டில் விரயம் செய்யப்படும் உணவிற்கு கூடுதல் கட்டணத்தை அபராதமாக வசூலிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.உணவு விரயம் என்பது சமூக குற்றமாக அந்நாட்டில் வரயறுக்கப்பட்டுள்ளது.இஃது மலேசியாவிலும் அமல்படுத்தப்பட வேண்டும்.
    என்னதான் பணம் கொடுத்து உணவை நாம் வாங்கினாலும் அதனை விரயம் செய்யும் உரிமை நமக்கு கிடையாது.பணம் நம்முடையதாக இருந்தாலும் உணவு என்பது பொது சொத்து.அதனை விரயம் செய்யும் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தில் பெரும் குற்றவாளியே.ஒருவேளை உணவிற்காக எத்தனையோ வயிறுகள் பட்டினியால் வாடும் போது அந்த உணவை விரயம் செய்வது மிகவும் தண்டிக்க வேண்டிய ஒன்றாகும்.  
   மலேசியாவில் எந்தநேரத்திலும் உணவு கடைகள் திறந்திருப்பதால்  தேவைக்காக இல்லாமல் நினைத்த நேரம் எல்லாம் உணவு உண்ணும் வாய்ப்பு இயல்பாகவே அமைந்து விடுகிறது.அவ்வாறு அமையும் போது அஃது உணவு விரயத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி உடல் பருமன் உட்பட பல்வேறு உடல் ரீதியிலான சிக்கலையும் ஏற்படுத்துகிறது.
    உணவு விரயத்தால் வருங்காலத்தில் உணவு தட்டுப்பாட்டில் மலேசியா சிக்கிக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் இப்பவே விவேகமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.நாடு முழுவதும் உணவு வங்கி திட்டத்தை அமைப்பதை முதன்மை செயல்பாடாக அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும்.உணவு வங்கியில் சேமிக்கப்படும் உணவு தேவைப்படுவோருக்கு சென்றவடைவது அவசியமாகிறது.
   மேலும்,24 மணி நேரம் இயங்கும் உணவகங்கள் மற்றும் விரைவு உணவகங்கள் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தப்படவும் வேண்டும்.இஅரவு நேரங்களில் பொழுதுபோக்கிற்காக உணவங்களை தேடும் மலேசியர்கள் தேவைக்கு உட்பட்ட உணவை  தேர்வு செய்யாமல் தேர்வு செய்த உணவை சாப்பிட்டு முடிக்காமல் விரயமாக்குகிறார்கள்.
    உணவு விரயத்திற்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வை மேற்கொள்வது இன்றைய சூழலில் பெரும் அவசியமாகிறது.இந்த விழிப்புணர்வை நாட்டின் அனைத்து தரப்பினர் மத்தியிலும் கொண்டு செல்லப்பட வேண்டும்.உணவங்கள்,சிற்றுண்டிச்சாலைகள்,பேராங்காடிகள்,விரைவு உணவங்கள் உட்பட உணவு மையங்கள் ஆகியவற்றின் மீது துரித கண்காணிப்பினை மேற்கொள்ள வேண்டும்.
    அதுமட்டுமின்றி,உணவு விரயம் செய்வதை குற்றமாக வரையறுக்க சட்டம் வரையறுக்கப்பட வேண்டும்.உணவு விரயம் செய்யும் தனிநபர்,உணவங்கள் உட்பட அனைத்து நிலையிலானவர்கள்  மீதும் சட்டத்தை பயன்படுத்தி  தண்டனை வழங்க வேண்டும்.உணவு விரயம் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கையும் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களும் முன்னெடுக்க தவறினால் மலேசியா பெரும் உணவு தட்டுப்பாட்டிற்கு ஆளாகும் என்பதை நினைவுறுத்த வேண்டியுள்ளது.
   உணவு விரயத்தை தடுக்க ஒவ்வொரு மலேசியர்களும் தங்களின் பங்களிப்பினை செய்திட முன் வர வேண்டும்.இந்த உணவு விரயத்தை தடுக்க அதற்கான அடித்தலம் ஒவ்வொரு மலேசியர்களின் வீடுகளிலிருந்தும் தனி மனிதர்களிடத்திலிருந்தும் தொடங்க வேண்டும்.நாம் அனைவரும் ஒருமித்த சிந்தனையோடும் உணவு இல்லாமல் பசியாலும் பட்டினியாலும் வாடும் பரிதாபத்திற்குரிய அந்த மனித உயிர்களை நினைத்துப் பார்த்தால் உணவை விரயம் செய்வது எத்தகைய பாவச் செயல் என உணர்வோம்.
   தனி மனிதன் ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்துவிடு என பாரதி கூறுகிறான்.ஆனால்,நாம் தனி மனிதனுக்கு கிடைக்க வேண்டிய உணவை தடுத்து இயற்கைக்கு மாறாக அதனை விரயம் செய்கிறோம்.சமூக குற்றங்களுக்கு நிகரான உணவு விரயத்தை யார் செய்தாலும் அஃது குற்றமாக கருதி தண்டனை கொடுக்கும் நிலை உருவானால்தான் வருங்காலத்தில் உருவெடுக்கவிருக்கும் பெரும் ஆபத்துகளிலிருந்து மலேசியா விடுப்பட முடியும்.
   நாம் விரயமாக்கும் ஒவ்வொரு பருக்கை உணவு யாரோ ஒருவருடையது என்பதை நாம் கருத்தில் கொண்டு உணவு விரயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.நாம் இன்று செய்யும் இந்த சமூக குற்றத்தினால் நாட்டின் அடுத்த தலைமுறை உணவிற்காக கையேந்தும் நிலை உருவெடுக்கும் என்பதை நாம் மறக்ககூடாது.
   ஏழ்மையும்,வறுமையும் ஆட்கொண்ட எத்தனையோ நாடுகளில் பசி,பட்டினியால் பஞ்சத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு நொடியும் மரணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஒட்டிய உடம்போடு,பசியின் கோரதாண்ட்வத்தின் தோற்றத்தோடு ஒருவேளை உணவுகூட இல்லாமல் நம் நாட்டின் அடுத்த தலைமுறை குழந்தைகள் கையேந்தும் காட்சியை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில் நாம் உணவு விரயம் எனும் கொடுரத்திற்கு  சாவுமணி அடிக்க வேண்டும்.
   மாற்றம் ஒன்றே மாறாதது.எனவே,நாம் நினைத்தால் மாற்றத்தை உருவாக்க முடியும்.அலட்சியமும் அக்கறையின்மையும்  நாட்டின் பொருளாதாரத்தையும் நாட்டு மக்களையும் குழிதோண்டி புதைத்து விடும் என்பதை நினைவுறுத்த வேண்டியுள்ளது.உணவு விரயத்தை விரட்டி அடிப்போம்.உணவு தட்டுப்பாட்டை தடுத்திடுவோம்.
   

No comments:

Post a Comment

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!!

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!! மலேசியாவில் வாழ்ந்த வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்திர இடத்தை தங்களின் தனி...