Sunday, 8 March 2020

பெண்ணுரிமையென்பது உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும்!!


பெண்ணுரிமையென்பது உழைப்பு  மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும்!!

(சிவாலெனின்)

பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்களுக்கு துளியும் சாத்தியமில்லை.சமூகத்தில் பெண்களின் நிலையை வைத்தே சமூக முன்னேற்றத்தை நம்மால் அளவிட முடியும் என்கிறார் தொழிலாளர் வர்க்கத்தின் தோழன் காரல் மார்க்சு.ஒரு சமூகத்திலும் அல்லது ஒரு நாட்டிலும் பெண்கள் தங்களுக்கான உரிமையோடும் சுதந்திரத்தோடும் வாழ்கிறார்கள் என்றால்,அச்சமூகமும் அந்நாடும் நிச்சயம் முன்னேற்றமும் வளர்ச்சியும் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணாத்திக்கம் கொண்ட இவ்வுலகில் பெண்கள் தங்களுக்கான அனைத்தையும் போராடியே பெறப்பட்டு வந்துள்ளனர்.அவர்களின் உரிமை,தேவைகள்,உணர்வுகள் உட்பட பல்வேறு நிலைகளில் அவர்களின் போராட்டங்கள் தான் அவர்களுக்கான உன்னதத்தை பெற வைத்துள்ளது.எந்த இனமாகவும் எந்த தேசமாகவும் இருந்தாலும் பெண்களுக்கெதிரான பெரும்பான்மை ஆண்களின் மனோபாவம் பெண் என்பவள் ஆணுக்கு அடிமையாகத்தான் இருத்தல் வேண்டும் என்பதாகும்.
உலகில் ஆணுக்கு பெண் எந்நிலையிலும் சலைத்தவள் அல்ல,பெண்ணும் ஆணுக்கு நிகரானவளே என சோசலீச சிந்தனையாளர்கள் அக்காலம் தொட்டே பேசியும் எழுதியும் வந்துள்ளனர்.பெண்களுக்கு சரிநிகரான உரிமை மட்டுமின்றி ஆணாத்திக்கம் நிறைந்த முதலாளித்துவம் அவர்களுக்கு ஆண் தொழிலாளியை காட்டிலும் குறைவான ஊதியம் கொடுத்து பெண்களின் உழைப்பையும் சுரண்டியுள்ளனர் என்பது வரலாற்று துயரம்.

பொதுவாகச் சமூகவியல் கோட்பாட்டின் படி ஒத்த தகுதியுடைய இரு கூறுகளிடையே எப்பவுமே முரண்பாடுகள் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கும்.அவ்வகையில்,ஆண் – பெண் என்ற இரண்டு உயிர்களுக்கிடையே அவை தோன்றிய காலம் முதல் போராட்டமும் முரண்பாடும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.மானுடத்தின் உயர்ந்த பண்பு மனிதனை மனிதனாக  மதிப்பதாகும்.ஆனால்,இப்பண்பு அக்காலம் தொட்டு இன்று வரை மனிதமனங்களில் குறிப்பாக ஆண்களின் மனங்களில் இன்னமும் அந்நியமாக இருந்துக் கொண்டு வெறுமையாகவே காட்சி அளிக்கிறது.
சொந்த வீடுகள் தொடங்கி சமூகம்,வேலை இடம்,கல்விகூடம்,நாடு என எல்லா நிலையிலும் பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளையும் கொடுமைகளையும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கேள்விக்குட்படுத்தப்பட்டு தான் வந்துள்ளது.இன்றைக்கு நாம் என்னதான் பெண்ணியம் குறித்தும் பெண் விடுதலை குறித்தும் பேசினாலும் இன்னமும் பெண்களை ஆணுக்கு நிகரான உயிர்களாய் ஆணாதிக்க உலகம் ஒப்புக்கொள்ளவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.

இன்னமும் நாம் பெண்களுக்கு எதிரான கருத்துகள் உலவும் போது சோசலீச சிந்தனைகளையும்,பெரியாரையும்,பாரதியும்,பாரதிதாசனையும் தான் துணைக்கு அழைக்கிறோம்.இன்றைய சூழலுக்கு ஏற்ப பெண்ணிய சிந்தனையை தூண்டும் வகையிலும் அவர்களுக்கு குரல் கொடுக்கும் வகையிலோ ஒரு ஆணைக்கூட பார்க்கவோ அவரது கருத்தினை மேற்கோள் காட்டவோ நமக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களுக்கெதிரான அநீதிகளுக்கு எதிராகவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் சில பெண்னியவாதிகளும் போராளிகளும் உயிர்ப்பித்துக் கொண்டுதான் இருந்தார்.பெண்கள் சந்தித்த வாழ்வியல் போராட்டங்களும்  சமூகப் பிரச்னைகளும் சமூக மறுப்புகளும் பெண்ணிய் சிந்தனைகள் தோன்ற காரணியமாயின. ஆனால்,அவர்களின் போராட்டங்களும் சிந்தனைகளும் நவீனத்துவத்தாலும் முதலாளித்துவ வியபார விளம்பரங்களாலும் திசைமாறி போய்விடுகின்றன.
இம்மாதிரியான சூழலில்தான் பெண்களின் வேலை நேரத்தை குறைக்கவும்,அவர்களின் ஊதியத்தை உயர்த்த வலியுறுத்தியும் மட்டுமின்றி பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை கோரிக்கையாக முன் வைத்தும் 1908ஆம் ஆண்டு மார்ச் 8நாள் மாபெரும் பேரணி நடந்தேறியதுஇப்பேரணியில் அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கம் மற்றும் இரஷ்ய புரட்சி இயக்கத்திற்கும் பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

உலக மகளிர் நாளை ஐ.நா 1975ஆம் ஆண்டு அங்கீகரித்தது.ஆனால்,1908ஆம் ஆண்டு நடைபெற்ற பேரணிக்கு பின்னர் 1909ஆம் ஆண்டில் மார்ச் 8ஆம் தேதி இந்நாளை தேசிய பெண்கள் நாளாக அமெரிக்க சோசலீஸ்ட் கட்சி அறிவித்தது.அதனை தொடர்ந்து சர்வதேச மகளிர் நாள் அனுசரிக்கப்பட  வேண்டும் என்னும் சிந்தனையை முன் வைத்தவர்  ஜெர்மனிய சேர்ந்த  மார்க்சிய தத்துவவாதியான கிளாரா ஜெட்கின் என்பவராவார்.
பெண்களுக்கான உரிமைகளை கேட்டுப் போராடிய செயற்பாட்டாளரான கிளாரா ஜெட்கின் 1911இல் நடைபெற்ற  சர்வதேச மகளிர் நாள் பேரணிக்கு பெண்களை திரட்டியவராவர்.இவர் உலக  கம்யூனிச இயக்கங்களின் மதிப்புக்குரிய தொழிலாளர் சிந்தனையாளரான ரோஸா லக்ஸம்பர்கின் நெருங்கிய தோழியாவார்.
முன்னதாக 1910ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த  உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் உலக மகளிர் நாள் சிந்தனையை கிளாரா ஜெட்கின் முன் வைத்தார்.அம்மாநாட்டில் 17 நாடுகளை சேர்ந்த சுமார் 100 பெண்கள்  கலந்துக் கொண்டனர் என்பது வரலாறு.கிளாரா ஜெட்கின் ஒரு சர்வதேசப் பெண்கள் தினம் வேண்டும் என்ற யோசனையை முன்மொழிந்தபோது எந்த நாளில் அதைக் கொண்டாடவேண்டும் என்று குறிப்பிட்டு எந்த தேதியையும் கூறவில்லை.

முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, 1917-ம் ஆண்டு ரஷ்யாவில் போர் வேண்டாம், "அமைதியும் ரொட்டியும்"தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி (ஜூலியன் நாட்காட்டியின்படி பிப்ரவரி 23) பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினர். நான்கு நாள்கள் நடந்த இந்தப் போராட்டம், சர்வதேச மகளிர் தினம் என்ற கருத்துக்கு உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது. நான்கு நாள்கள் நீடித்த இந்தப் போராட்டம் கடைசியில் ரஷ்ய மன்னரான ஜார்ஜ் மன்னரை அரியணையை விட்டிறங்குவதற்கான அழுத்தத்தை தந்தது. முடியாட்சியும் முடிவுக்கு வந்தது. முடியாட்சிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது. இந்த மாற்றம்தான், 1917 அக்டோபரில் நடந்த புகழ்பெற்ற ரஷ்ய புரட்சிக்கும், அதன் விளைவாக உலகெங்கும் சோஷியலிஸ்ட் அரசுகள் தோன்றுவதற்கும் முன்னோட்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதை அடிப்டையாகக் கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. எனினும் 1975-ம் ஆண்டில்தான் .நா. மார்ச் 8- சர்வதேசப் பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்தது. அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது .நா. இதன்படி .நா. அறிவிப்புக்குப் பின் வந்த முதல் பெண்கள் தினத்தின் முழக்கம் "சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமையாக சிந்தி" என்பதாகும்.
இன்று உலகம் முழுவதும் மகளிர் நாள் ஒரு கொண்டாட்டம் போல்  கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் அக்கொண்டாட்டத்திற்கு மலேசியா மட்டும் விதிவிலக்கல்ல.மலேசிய பெண்களும் இந்நாளின் உன்னதம் புரியாமல் இன்னமும் அதனை பிறந்தநாள் போலவும் பண்டிகைகள் போலவும் தான் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மலேசியாவில் சமூகம்,அரசியல்,பொருளியல்,தொழில்,ஊதியம் உட்பட அனைத்து துறைகளிலும் அவர்களுக்கான அங்கீகாரமும் உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கூட சிந்திக்காமல் இந்நாளில் கூட வாழ்த்து கூறி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வருத்தமான வேதனை.

எப்படி மே நாளில் தொழிலாளர் வர்க்கம் அதன் முதலாளிகளால் அந்நாளின் உன்னதம் மறைக்கப்பட்டு கேளிக்கையாலும் விளையாட்டுப் போட்டிகளாலும் ஏமாற்றப்படுகிறார்களோ அதுபோல் உலக மகளிர் நாளும் பெண்களின் சிந்தனையை மழுங்கடிக்கவும் அவர்கள் அதுகுறித்த சிந்தனையில் எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக கொண்டாட்டங்களும் பல்வேறு விளம்பரங்களும் முதலாளி வர்க்கத்தின் யுக்தியாய் மாறிப்போனது இங்கு.

இருந்த போதிலும் இந்த உன்னதமான நாளில் சோசலீச சிந்தனை அமைப்புகளும் சில பெண்கள் இயக்கமும் பேரணியை ஏற்பாடு செய்து அதன் வாயிலாக நாட்டில் மகளிர் உரிமைக்காக குரல் எழுப்புவது ஆறுதலாக இருந்தாலும் அப்பேரணியில் கலந்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை என்பது ஏமாற்றமே.சின்ன தீ குச்சியிலிருந்துதான் பெரும் தீ பற்றி எரிகிறது என்பது போல் இந்த சிறு கூட்டம் ஒருநாள் மாபெரும் பேரணியாய் உயிர்த்தெழும் என நம்புவோம்.

பொதுவாகவே,பெண்ணியம்,பெண் சுதந்திரம் குறித்து பேசும் போது அது என்னவோ ஆணுக்கு எதிரானது போலவும் அஃது பண்பாட்டின் சீர்கேடு போலவும் சித்தரிக்கப்படுகிறது.ஒரு விடுதலைக் கோரிக்கையை, அதற்கான உரையாடலைக் கொண்டிருக்கும் எந்த ஒரு கோட்பாடும், ஆதிக்கத்துக்கும் அதிகாரத்திற்கும் எதிரானதாகத்தான் இருக்கும். பெண்ணியம் என்பதும், ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கிடக்கும் பெண்களுடைய விடுதலைக் குரலாகவே கருதப்பட வேண்டும். குறிப்பாகச் சொல்லப்போனால், பெண்ணியம் என்பது, ஆண்களுக்கு எதிரானது அல்ல; ஆணாதிக்கத்திற்கும், ஆண் அதிகார முறைகளுக்கும்தான் எதிரானது. அது பண்பாட்டு சீரழிவு அல்ல.மாறாய்,பெண்ணிய எழுச்சி என்பது அனைவரிடமும் உணர்த்தப்பட வேண்டும்.

வரலாற்றின் முதல் வர்க்க ஒடுக்குமுறை என்பது, பெண் பாலை, ஆண் பால் ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகிறது என்கிறார் ஏங்கல்ஸ். மனித சமூகத்தின் இயங்குதலுக்கு அடிப்படையாக இருப்பது, பொருள் உற்பத்தியும், உயிரின மறு உற்பத்தியும்தான். உற்பத்தியிலும், மறு உற்பத்தியிலும் கட்டுப்பாடு இல்லாது, பெண்கள் ஈடுபட்டிருந்த நிலைமைகள் தாய்வழிச் சமூக அமைப்பில் இருந்திருக்கின்றன. இதற்குப்பின் தோற்றுவிக்கப்பட்ட ஆண்வழிச்சமூக முறைமையில்தான், பெண்களின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்திச் செயல்பாடுகள் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு, சமூகத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் வெளியேற்றப்பட்டதால், அவ்வுற்பத்தி நடவடிக்கையின் மூலம் கொணரப்பட்ட சொத்துக்கள், செல்வங்கள், பொருட்கள், உடைமைகளுக்கு ஆண்களே உரிமை கொண்டாடும் நிலை ஏற்பட்டது.

இதனால், பெண்கள், ஆண்வழிச் சமூகத்தைச் சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது மட்டுமல்லாமல், இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆணின் உடலின்ப  வேட்கைக்குப் பலியான பெண்கள், கேவலம், குழந்தைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான கருவிகளாக மட்டும் ஆக்கப்பட்டனர். மேலும், பொருள் உற்பத்தித்தளம் ஆண்கள் வசம் இருந்ததால், ஆண்களின் சொத்துகளுக்கு வாரிசுரிமை கொண்டாடும் வகையில் சொத்துடைய ஆணின் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பணிக்குப் பெண்கள் ஒதுக்கப்பட்டனர். இக்குடும்ப அமைப்பில், ஒரு பெண், ஒரு ஆணுடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டனஆக, ஆணாதிக்கத்தின் பொருளியல் அடிப்படை என்பது, பெண்களின் உழைப்பு, சக்தி ஆகியவற்றின் மீது ஆண்கள் கொண்டுள்ள அதிகாரமே ஆகும். இதுதான், பெண்கள் ஒடுக்கப்படுவதற்கான வரலாற்றுப் பின்னணியாக நாம் கருதமுடியும்.

இதனை தந்தை பெரியார் தனது பெண்ணிய சிந்தனையில் பல்வேறு நிலைகளில் எடுத்துரைத்து பெண் விடுதலைக்கு அச்சாரம் இட்டுள்ளார். பெண்ணுரிமை என்பது கல்வி,வேலை வாய்ப்பு,மறுமணம்,சொத்துரிமை போன்ற சீர்த்திருத்த அடிப்படையில் மட்டுமின்றி உழைப்பு சுரண்டல் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு உட்பட்ட பெண்களுக்காகவும் அது ஓங்கி ஒலிக்க வேண்டும்.பெரியாரின் சீர்த்திருத்தம் பெண்ணிய புரட்சியின் தொடக்கம் என்றால் சோசலீச  பெண்ணிய சிந்தனை நிலவுகின்ற சமூக அமைப்பையே புரடிப்போடக்கூடிய  புரட்சிகர அரசியலின் உச்சம் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பெண்களை இழிவுப்படுத்துகின்ற பழகத்தை அறிவில்லாத செயலாகவும் மூடநம்பிக்கையாகவும் கருதும் பாரதி “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்”என்கிறார்.ஆணுக்கு பெண் சமம் என்பதில் எந்த பாகுப்பாடும் கொள்ளக்கூடாது என்பதைவும் அவர் தனது கவிதையில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.

இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் உலக மகளிர் நாள் கொண்டாட்டத்தின்  அடிப்படையில் உருவானதல்ல.அஃது போராட்டத்தில் தொடங்கி உலக மகளிரின் உரிமைக்காக குரல் எழுப்பிய உன்னதநாள்.நடப்பில்,சமூகம்,அரசியல்,பொருளியல் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடும் நாளாக இந்நாள் உருவெடுத்திருந்தாலும் பாலின பாகுப்பாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள்,வேலை நிறுத்தங்களில்தான் இந்நாளின் உண்மை வரலாற்று வேர்கள் இறுக்கமாய் பற்றிக் கொண்டுள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

“பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்காத வரை;இந்த உலகம் அவர்களை திரும்பிப் பார்க்காது”

No comments:

Post a Comment

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!!

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!! மலேசியாவில் வாழ்ந்த வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்திர இடத்தை தங்களின் தனி...