மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதில்
பி.எஸ்.எம் என்றுமே தனித்துவமாக விளங்குகிறது!!
(சிவாலெனின்)
அரசியல் என்பது
மக்களுக்கானது.அரசியல் கட்சிகள் மக்களின் குரலாகவும் அவர்களின் உரிமைகளையும் நலனையும்
காக்கும் அரணாகவும் இருத்தல் வேண்டும்.மலேசியாவில் அத்தகைய உன்னதங்களையும் கொள்கைகளையும்
துளியும் விட்டுக்கொடுக்காமலும் தடம் மாறி போகாமலும் கடந்த 21ஆண்டுகளாய் மக்களின் குரலாக
ஓய்வில்லாமல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் கட்சியாக மலேசிய சோசலிச கட்சியான பி.எஸ்.எம்
விளங்குகிறது என்றால் அஃதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இக்கட்சி
சோசலிச சித்தாந்தத்தையும் கொள்கையையும் அடிப்படையாக கொண்டு இந்நாட்டில் ஒடுக்கப்படும்
மற்றும் அநீநிதிகள் இழைக்கப்படும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தொடர்ந்து போராடி
வருவது குறிப்பிடத்தக்கது.நாட்டிலுள்ள கட்சிகளில் 99 விழுகாடு கட்சிகள் இனம்,மதம் சார்ந்த
கொள்கைகளை அடிப்படையாக கொண்டே அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தும் அதுதான் தங்களின் கட்சியின
அரசியல் கொள்கையாகவும் மெய்பித்து வருகிறார்கள்.
ஆனால்,பி.எஸ்.எம்
கட்சி எந்த இனத்தையும்,எந்த மதத்தையும் அல்லது குறிப்பிட்ட ஒரு தரப்பையோ சார்ந்திருக்கவில்லை.மாறாய்,ஒட்டுமொத்த
மலேசியர்களின் நலனுக்காகவும் மட்டுமின்றி இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமக்கனுக்காகவும்
அது தொடர்ந்து போராடி வருகிறது.பிற கட்சிகளை போல் அரசியல் விளம்பரத்தை கூட அந்நியமாக்கி
மக்களுக்கான உண்மையாக உழைக்கும் உன்னத கட்சியாக அது இவ்வாண்டு 21வது ஆண்டில் கால் பதிக்கிறது.
ஆட்சியை பிடிப்பதில்
மட்டுமே இலக்காக கொண்டு அரசியல் செய்யும் கட்சிகள் மத்தியில் மக்களுக்காக போராடுவதும்
அவர்களின் உரிமையை நிலைநிறுத்துவதுமே எங்களின் அரசியல்.எங்களின் அரசியல் மக்களுக்கானது.அது
நாற்காலியை குறி வைத்து அல்ல என்று முழங்கும் பி.எஸ்.எம் கட்சி இந்நாட்டில் எல்லாம்
எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்.ஏற்றத் தாழ்வு தேவையில்லை.எல்லாரும் சரிநிகரே எனும்
சோசலிச சமூகத்தை கட்டியமைக்கவே போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அஃது மிகையாகாது
.
நாட்டில்
கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டால்கூட அதை பத்திரிக்கையிலும்
ஊடகங்களிலும் செய்தியாக்கி அரசியல் லாபம் தேடும் அரசியல் கட்சிகள்,அரசியல்வாதிகள் மத்தியில்
நம் நாட்டில் எத்தனையோ மக்கள் பிரச்னைகளை கையிலெடுத்து பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர்
அதில் வெற்றியும் கண்டு எந்தவொரு விளம்ரமும் இல்லாமல் தொடர்ந்து மக்கள் பணியை சத்தம்
இல்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டின்
பொதுத்தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தத்தம் சொத்து விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அறிவித்து அதனை அமல்படுத்திய
முன்மாதிரியான கட்சியாக பி.எஸ்.எம் திகழ்கிறது.அக்கட்சியை சார்ந்து கவுன்சிலராக இருந்தவர்கள்
கூட தங்களின் சொத்துகளை வெளிப்படையாக அறிவித்துள்ளனர் என்பது வரலாறு.அன்றைக்கு அவர்கள்
செய்ததைதான் அன்மையில் நாடாளுமன்றத்தின் தீர்மானமாக்கப்பட்டது.
உழைக்கும்
வர்க்கத்தின் உரிமைகள் பி.எஸ்.எம் கட்சியின் முதன்மை முழக்கமாக இருந்து வரும் நிலையில்
இந்நாட்டில் தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு ஆக்கப்பூர்வமாகவும் அதேவேளையில் உன்னதமான
போராட்டத்தையும் கையிலெடுத்து இறுதி வரை ஒவ்வொரு தொழிலாளர் சார்ந்த பிரச்னைகளிலும்
தீர்வு கிடைக்கும் வரை தொழிலாளர் வர்க்கத்தின் அரணாக இக்கட்சி என்றுமே தனித்துவமாக
திகழ்கிறது எனலாம்.
தொழிலாளர்
வீட்டுடைமைத் திட்டம்,மாத சம்பள கோரிக்கை,தொழிலாளர் வேலை நிறுத்தம் உதவிநிதியம்,குத்தகை
அடிப்படையிலான தொழிலாளர் பிரச்னை,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,இலவச மருத்துவ வசதி,இலவச
கல்வி,இன அரசியலுக்கு எதிர்ப்பு, என பல்வேறு நிலைகளில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு
சிறந்த எதிர்காலத்தை முன்னிறுத்தியும் பி.எஸ்.எம் கட்சி அதன் ஆக்கப்பூர்வமான மக்களுக்கான
களப்பணியினை மேற்கொண்டு வருகிறது.
அதுமட்டுமின்றி,இந்நாட்டில்
மனித உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் எழுப்பி வரும் இக்கட்சி நாட்டில் இசா,போகா போன்ற
சட்டங்களுக்கு எதிராகவும் ஜி.எஸ்.டி போன்ற திட்டங்களுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களையும்
கவனயீர்ப்புகளை மேற்கொண்டு இக்கட்சியினர் அதனால் சிறை வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இக்கட்சியினரை
பொருத்தமட்டில் மக்களுக்காக போராடுவதும்,அதனால் சிறை செல்வதும் வழக்கமானதாக இருந்தாலும்
சலிப்பில்லாமல் தொடர்ந்து மக்களுக்காக போராடுவதே இவர்களின் தனி சிறப்பாக உள்ளது எனலாம்.மார்க்சின்
பெயரை சொன்னால் இன்றைக்கும் உலக முதலாளிகளுக்கு அச்சம் கௌவிக்கொள்ளும்.அதுபோல் மலேசியாவில்
பி.எஸ்.எம் கட்சியின் பெயரை சொன்னால் முதலாளிகளுக்கும் அதிகார வர்க்க அரசாங்கத்திற்கும்
பயம் பீறிட்டுக் கொள்ளும்.
நாடு முழுவதும்
எல்லாத் துறைகளில் தொழிற்சங்கத்தை உருவாக்குவது இக்கட்சியின் இன்றைய பெரும் செயல்பாடாக
உள்ளது.தொழிலாளர்களின் உரிமைக்கு தொழிற்சங்கமே தக்க பலமாக இருக்க முடியும் என்பதை பாதிக்கப்படும்
ஒவ்வொரு ஒவ்வொரு தொழிலாளர்களிடமும் எடுத்துரைத்து அதனை உருவாக்குவதில் ஆக்கப்பூர்வமாக
செயல்பட்டு வரும் அவர்கள் அதன் முதற்கட்ட நகர்வாக நாடு முழுவதுமுள்ள மருத்துவமனை துப்புரவுத்
தொழிலாளர் தொழிற்சங்கத்தை அமைக்கும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.மேலும்,லாரி ஓட்டுனர்களையும்
தொழிற்சங்கத்தின் கீழ் மையப்படுத்த அதுசார்ந்த கூட்டமைப்பையும் உருவாக்கி இயங்கிக்
கொண்டிருக்கிறார்கள்.
இந்நாட்டில்
எல்லா நிலையிலும் ஒடுக்கவும் புறக்கணிக்கவும் படும் இனமாக பூர்வகுடிகள் விளங்குகிறார்கள்.அவர்களின்
நிலம் பறிக்கப்படுவது,வாழ்வாதாரம் அழிக்கப்படுவதும் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில்
அந்த மக்களுக்கான உரிமை போராட்டத்தை அவர்களோடு கரம்கோர்த்து முன்னெடுத்ததில் பெரும்
பங்காற்றிய கட்சியாக பி.எஸ்.எம் விளங்குகிறது.
நாட்டில்
பூர்வீகம் அல்லது பாரம்பாரிய கிராமங்கள் அழிக்கப்படும் போதெல்லாம் அங்கு வாழ்ந்த மக்களின்
உரிமைகாக போராடிய வரலாற்றில் பி.எஸ்.எம் தனது பங்கினை இனம்,மதம் பாராமல் ஆற்றியுள்ளது.கடன்
தொல்லையால் வீடுகள் ஏலத்திற்கு வரும் போதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதும்
இக்கட்சியினர்தான்.நெகிரி செம்பிலான் கெட்கோ போராட்டத்தை பி.எஸ்.எம் கட்சியை ஒதுக்கி
விட்டு எழுதிட முடியாது.போராட்டக் காலக்கட்டத்திலும் சரி இப்பவும் சரி அம்மக்களோடு
களத்தில் நிற்பது பி.எஸ்.எம் மட்டும்தான்.போட்டோக்கு போஸ்ட் கொடுத்தவர்கள் ஆட்சிக்கு
வந்தவுடன் அம்மக்களை மறந்தது அதுவேறு கதை.
இந்நாட்டு
மக்களுக்காக மட்டுமின்றி,அந்நிய நாட்டுத் தொழிலாளர்களுக்காகவும் அகதிகளுக்காகவும் கூட
பி.எஸ்.எம் தொடர்ந்து மனிதம் எனும் சோசலிச சிந்தனையின் அடிப்படையில் அதன் ஆக்கப்பூர்வ பங்களிப்பினை செய்துக் கொண்டுதான்
இருக்கிறது.அந்நிய நாட்டுத் தொழிலாளி பாதிக்கும் போதெல்லாம் அவர்களின் குரலாக முதலில்
ஒலிப்பது பி.எஸ்.எம் கட்சியின் குரலாக தான் இருக்கும்.
மலேசியாவில்
மட்டுமின்றி,உலக ரீதியில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் அதற்கெதிரான
கண்டனத்தை பதிவு செய்வதையும் ஆக்கப்பூர்வமாக செய்து வரும் இக்கட்சி நாட்டில் நிலவும்
லஞ்சம்,ஊழல்,அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராகவும் வலுவான போராட்டங்களை ஒவ்வொரு காலக்கட்டத்திலும்
தனித்துவமாய் மேற்கொண்டு வந்துள்ளது.
ஆட்சியில்
இருப்பது நண்பனாக இருந்தாலும் மக்களுக்கு எதிரான திட்டங்கள் உருவாக்கப்படும் போது அதனை
எதிர்ப்பதில் ஒருபோதும் பி.எஸ்.எம் பின்வாங்கியதில்லை.முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு
எதிராகவும் சரி நடப்பு பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு எதிராகவும் சரி அவர்களின்
நன் திட்டங்களை ஆதரிக்கவும் மக்களுக்கு சுமையானவற்றை எதிர்க்கவும் ஒருபோதும் பி.எஸ்.எம்
தயங்கியதில்லை.
தேசிய முன்னணியின்
60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என தீவிரமாய் இயங்கிய பி.எஸ்.எம் பாக்காத்தான்
ஹராப்பான் ஆட்சிக்கு வந்த குறுகிய காலக்கட்டத்திலேயே பிடிபிடிஎன் விவகாரம்,இலவச மருத்துவ
திட்டம்,மடமடவென உயரும் வீடுகளின் விலை என பல்வேறு விவகாரங்களில் நடப்பு அரசாங்கத்தை
எதிர்த்து தனது கருத்தினை வெளிப்படுத்தி வருவதோடு ஆக்கப்பூர்வமான போராட்டங்களை முன்னெடுத்து
வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர்
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இக்ட்சியை சார்ந்த அதன் தலைவர் டாக்டர் நசிர் ஹசிம்
கோத்தா டாமான்சாரா(2008) தொகுதியிலும் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் சுங்கை சிப்புட்
( 2008,2014) தொகுதியிலும் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.நாட்டின்
14வது பொதுத்தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான்
கூட்டணியோடு சொந்த சின்னத்தில் போட்டியிடும் பி.எஸ்.எம் கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதோடு
அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் சொந்த வேட்பாளர்களையும் பாக்காத்தான் ஹராப்பான் சார்ந்த கூட்டணிகள் நிறுத்தியது.
மக்களுக்கு
இரு தவணைகள் நாடாளுமன்ற உறுப்பினராக சிறந்த சேவையை வழங்கி வந்த டாக்டர் ஜெயகுமார் தோற்கடிக்கப்பட்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.மக்களும் மாபெரும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் எனும் நிலையில்
மக்கள் சேவையில் நனி சிறப்பாக விளங்கிய பி.எஸ்.எம் கட்சியினரை காட்டிலும் அம்னோ-தேசிய
முன்னணிக்கு முடிவுக்கட்ட வேண்டும் எனும் இலக்கோடு பாக்காத்தான் ஹராப்பான்னுக்கு வாக்களித்து
விட்டனர்.
தோல்விகளை
கண்டு எப்பவுமே துவண்டு விடாமல்,அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி செல்வதே பி.எஸ்.எம் கட்சியின்
தனித்துவமாக இதுவரை இருந்து வந்துள்ளது.இவர்களின் போராட்டங்கள் எல்லாம் மக்களுக்கானதுதான்.இருந்தும்
ஏன் இவர்கள் தேர்தலிலும் இடைத்தேர்தல்களிலும் தோல்வியை தழுவுகிறார்கள் எனும் கேள்வி அவ்வப்போது எழுந்தாலும் அதற்கான பதில் “ பி.எஸ்.எம்
கட்சியின் போராட்டங்கள் நாற்காலியை குறி வைத்து அல்ல – மக்களுக்கான நன் அரசியலை நோக்கி”
என்பதை மட்டுமே விடையாக கூற முடியும்.
நாட்டில்
இயங்கும் அரசியல் கட்சிகளெல்லாம் முதலாளித்துவத்தோடு கைகோர்த்துள்ளன.அவை அரசியல் விளம்பரத்தை
தங்களின் லாபத்திற்கான முதலீடாக வரையறுக்கிறார்கள்.அந்த விளம்பரங்களில் மயங்கும் மக்களும்
விளம்பரத்தில் ஏமாந்து வாக்களித்து விடுகிறார்கள்.ஆனால்,பி.எஸ்.எம் அத்தகைய விளம்பரத்தை
கையிலெடுக்கவில்லை.எடுக்கவும் எடுக்காது ஒருபோதும்.அது நம்புவதெல்லாம் மக்களின் சிந்தனை
மாற்றத்தை மட்டுமே.
அறுபது ஆண்டுகால
அம்னோ தேசிய முன்னணியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த மக்கள் நிச்சயம் ஒருநாள் சோசலிச
சிந்தனையை ஏற்றுக் கொள்வார்கள்.அப்போது இனங்களுக்கும் மதங்களுக்கும் வேலை இருக்காது.ஏற்றத்தாழ்வு
குழித்தோண்டி புதைக்கப்பட்டிருக்கும்.முதலாளித்துவத்தின் கொட்டம் ஒடுக்கப்பட்டிருக்கும்.எல்லாமே
எல்லாருக்கும் எனும் சோசலிச சித்தாந்தம் உயிர்கொண்டிருக்கும்.அப்போது பி.எஸ்.எம் கட்சி
இருக்கோ அல்லது இல்லாமலும் போகலாம்.ஆனால்,அத்தகைய சூழலின் உருவாக்கத்தின் விதையை விதைத்த
பெருமையும் வரலாறும் பி.எஸ்.எம் கட்சியை சார்ந்ததாகவே இருக்கும்.
அதுதான் அக்கட்சியின்
இத்தனை ஆண்டுகால போராட்டங்களின் உச்சகட்ட வெற்றியாகவும் சாதனையாகவும் இருக்க முடியும்.விளைச்சலை
கண்டு கவலைப்பட வேண்டாம்.விதைத்துக் கொண்டே இருப்போம்.முளைத்தால் மரம்,இல்லையேல்,உரம்
எனும் உயரிய சித்தாந்தத்தோடு பி.எஸ்.எம் கட்சி நம் நாட்டில் தொடர்ந்து அதன் மக்கள்
பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.
நாட்டில்
மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் பி.எஸ்.எம் கட்சியை இன்றைய இளம் தலைமுறை குறிப்பாக
உயர்க்கல்வி கூடம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மிக அனுக்கமாக நெருங்க தொடங்கி விட்டனர்.இளம்
தலைமுறைகளின் சிந்தனையும் அவர்களின் ஆழமான அரசியல் பார்வையும் நடப்பியல் சூழலில் முதலாளித்துவ
அரசுகளுக்கு எதிராகவும் ஒடுக்கப்படும் அல்லது வஞ்சிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகவும்
விளங்கும் நிலையில் அவர்களின் ஆதரவுகள் மக்களுக்காக மட்டுமே உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும்
பி.எஸ்.எம் கட்சிக்கு நிச்சயம் மாறும்.அதற்கான காலமும் கனியும் என்பது புகழ்ச்சி வார்த்தையல்ல.சாத்தியமானது.
அரசியலில்
21ஆண்டுகள் என்பது நீண்டதொரு பயணமாக இருந்தாலும் பி.எஸ்.எம் கட்சி முதலாளித்துவ சிந்தனையில்
சிக்கிக் கொண்டிருக்கும் மலேசிய அரசியல் சிந்தனையில் தனித்துவமாய் போராடி மக்களின்
ஆதரவை தொடர்ந்து பெற்று வருவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.
மலேசியாவிலும் முதலாளித்துவ
சிந்தனை அரசியலுக்கு முடிவுக்கட்டும் நாள் வரும்.அன்றைக்கு சோசலிச சிந்தனை மக்களிடையே
பற்றிக் கொள்ளும்.அரசாங்கம் என்பது மக்களுக்கானதாய் இயங்கும்.
மக்களுக்கான
அரசியலை இந்நாட்டில் முன்னெடுத்து அதனை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி வரும் பி.எஸ்.எம்
கட்சி அதன் 21வது ஆண்டை எட்டியுள்ள நிலையில் அக்கட்சியின் மக்கள் போராட்டத்திற்கும்
களப்பணிக்கும் அதேவேளையில் அதன் அர்ப்பணிப்பிற்கும் நன்றியும் வாழ்த்தும் சொல்வதில்
பெருமிதம் கொள்வோம்.
“ஓங்கட்டும் மக்கள் புரட்சி – வளரட்டும் சோசலிச
சிந்தனை”
No comments:
Post a Comment